டேனியல் பாலாஜி இந்து, அவரை திட்டாதீர்கள்: காயத்ரி ரகுராம்

Published On:

| By Balaji

ஜீ5 OTT தளத்தில் வெளியாகவிருக்கும்‘காட்மேன்’வெப்சீரிஸின் டீசர் பிராமண சமுதாயத்தை அவமதித்ததாக, கடுமையான எதிர்ப்புகளுக்கு ஆளான நிலையில், அதில் நடித்துள்ள டேனியல் பாலாஜியை யாரும் திட்ட வேண்டாம் எனவும் அவர் ஒரு இந்து என்றும் குறிப்பிட்டு நடிகை காயத்ரி ரகுராம் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காட்மேன்’வெப் சீரிஸ் ஜீ5 தளத்தில் வரும் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சோனியா அகர்வால், டேனியல் பாலாஜி, ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த வெப்சீரிஸின் டீசர் மே 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த டீசரில் இடம் பெற்றிருந்த‘என்னை சுத்தி இருக்கிற பிராமணர்கள் எல்லாம் அயோக்கியனா இருக்கானுங்க’என்னும் வசனம் சர்ச்சைக்கு உள்ளானது.

மேலும் டீசரில் சாமியார் உடையில் இருக்கும் நடிகர் டேனியல் பாலாஜி சம்மந்தப்பட்ட காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியது. இந்தத் தொடர் பிராமணர்களையும், இந்து மதத்தையும் அவமதிப்பதாகக் குறிப்பிட்டு பலரும் சமூகவலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து, இந்த வெப்சீரிஸ் ஒளிபரப்பப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டப் பிரிவின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக மின்னம்பலத்தில் [பிராமணர்களுக்கு எதிரான வெப்சீரிஸ்? பாஜக எதிர்ப்பு!](https://minnambalam.com/public/2020/05/28/65/godman-web-series-bjp-complaint-police-commissioner) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதற்குப் பின்னரும் இந்த வெப் சீரிஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து இந்து சமய மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நடன இயக்குநரும், பாஜக பிரமுகருமான நடிகை காயத்ரி ரகுராம் ‘காட்மேன்’ வெப்சீரிசிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் நடிகர் டேனியல் பாலாஜிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த காட்மேன் விவாதம் தொடர்பாக நான் எனது சில நண்பர்கள் சிலருடன் பேசி இருந்தேன். தயவுகூர்ந்து நடிகர்களை டார்கெட் செய்யாதீர்கள். அவர்களை அழைத்து தொந்தரவு செய்யாதீர்கள். டேனியல் பாலாஜி ஒரு இந்து தான். அவரது பெயரில் இருக்கும் டேனியல் என்பது சித்தி தொடரில் நடித்தன் மூலம் வந்தது. அவரது உண்மையான பெயர் பிசி.பாலாஜி.” என்று கூறியுள்ளார்.

மேலும், “நடிகர்களையும், பிரபலங்களையும் ஃபோனில் அழைத்துத் துன்புறுத்துவதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். நடிகர் பாலாஜி திரைப்படங்களில் தொடர்ந்து நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர்களுக்கு அவர்களது கதாபாத்திரம் குறித்து மட்டுமே இயக்குநர்கள் விளக்குகிறார்கள். முழு கதையையும் கூறுவது இல்லை. ஆம் இந்த ட்ரெய்லர் நிச்சயம் ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. ஜீ 5 இந்த டீசரைக் கண்டிப்பாக மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

‘இது போன்ற பிராமணர்களுக்கு எதிரான படங்களை வன்மையாக கண்டிக்க வேண்டும். அதில் எந்த மாற்று கருத்து இல்லை.’என்றும் காயத்ரி குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்ற டீசர் நீக்கப்பட்டு புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share