eமீண்டும் இணைந்த இளையராஜா- கங்கை அமரன்

Published On:

| By admin

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் கங்கை அமரன் 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்கள் இளையராஜாவும் கங்கை அமரனும். கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல படங்களுக்கு இருவரும் இணைந்து இசையமைத்து இருக்கிறார்கள்.

அண்ணன் தம்பி ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதாவது கடந்த 2000ம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் வெளியான ‘சின்ன ராமசாமி பெரிய ராமசாமி’ படத்தை தயாரிக்கும் போது ஏற்பட்ட கருத்து மோதலால் கடந்த 13 வருடங்களாக பேசாமல் இருந்தார்கள்.

இந்நிலையில் நேற்று இளையராஜா கங்கை அமரன் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது, இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்கும்படியான புகைப்படத்தை கங்கை அமரனின் மகன்களான நடிகர் பிரேம்ஜி மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சந்திப்பு குறித்து கங்கை அமரன் பேசுகையில், ‘திடீரென இரவு அண்ணன் அழைப்பதாக எனக்கு தொலைபேசி வாயிலாக கூறினார்கள். இதற்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன். உடனே கிளம்பி போனேன். ஒன்றரை மணி நேரம் அமைதியாக அருமையாக பேசினார். 13 வருடங்கள் பேசாமல் இருந்தது கடினமான ஒன்று. இனிமேல் மகிழ்ச்சியாக இணைந்திருப்போம்’ எனவும் கூறியுள்ளார்.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment