‘டாக்டர்’ பட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் நடிகர் விஜய்யுடன் இணைந்த ‘பீஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை திரைப்படம் நிறைவேற்றவில்லை.
படத்தின் திரைக்கதையில் நெல்சன் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம், இவ்வளவு பெரிய முன்னணி நட்சத்திரம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டும் அந்த வாய்ப்பை சரியாக நெல்சன் செய்யவில்லை என இவர் மீது ரசிகர்கள் தொடர்ந்து இணையத்தில் குற்றசாட்டுகளை வைத்தனர். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளது என்று இயக்குநர் நெல்சனை லோகேஷூடன் ஒப்பிட்டு இணையத்தில் கேலி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ஆர்.ஜே. பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் இந்த மாதம் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடல் ஒன்றிற்கான ப்ரோமோ பேட்டியை பகிர்ந்து இருந்தார். இந்த பதிவிற்கு கீழே ரசிகர் ஒருவர், ‘இதுபோல தான் பாடல் வெளியீடு எல்லாம் கிரியேட்டிவ் ஆக செய்கிறேன் என்று நெல்சன் காமெடி செய்தார். ஆனால், எல்லாம் ஏமாற்றமே’ என்று கூறியிருக்கிறார்.
இந்த ட்வீட்டிற்கு தான் ஆர்.ஜே. பாலாஜி பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ” நெல்சன் மிகவும் திறமையான இயக்குநர். அவருடன் நான் நிறைய நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அவருடைய படங்களுக்கும் நான் மிகப்பெரிய ரசிகன். அவ்வளவு திறமையான இயக்குநர் அவர்! அவருடைய கடினமான இந்த வெற்றி பாதை பலருக்கும் முன்மாதிரி. அவர் தன்னுடைய படங்கள் மூலம் வரும் காலத்தில் நிச்சயம் நமக்கு மகிழ்ச்சியை தருவார். அதனால், இது போல அவரை கேலி செய்வதை தயவுசெய்து நிறுத்துங்கள்” என அந்த ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல, இயக்குநர் லோகேஷ் கனகராஜூம், நெல்சனை இணையத்தில் கேலி செய்வதை குறிப்பிட்டு தனக்கு கஷ்டமாக இருப்பதாகவும்,தன்னையும் இது போன்ற தோல்விகள் பாதிக்கும் எனவும் சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
**ஆதிரா**