ரம்யா கிருஷ்ணனின் காரில் 96 மது பாட்டில்கள்: டிரைவர் கைது!

entertainment

நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் இருந்து சென்னை போலீசார் 96 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கிறது. சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்தை கடந்து வருகிறது. இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் டாஸ்மாக் கடைகள் இதுவரை திறக்கப்படாத நிலையில் பலரும் பிற மாநிலங்களில் இருந்து மதுபானம் வாங்கி சென்னைக்கு எடுத்து வருகின்றனர். விதிகளை மீறி மதுபானம் கடத்த முயற்சித்த பலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த வகையில் ஜூன் 11ஆம் தேதி ஈசிஆர் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த TN 07 CQ 0099 பதிவு எண் கொண்ட டொயோட்டா இன்னோவா காரை முட்டுக்காடு செக் போஸ்ட்டில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தான் அந்தக் கார் நடிகை ரம்யா கிருஷ்ணனுடையது என்பது தெரியவந்துள்ளது. போலீசார் பரிசோதனை மேற்கொண்ட போது காரில் 96 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றில் 8 பாட்டில்களை தவிர மற்றவை அனைத்தும் பீர் பாட்டில்கள் என்பதும் கண்டறியப்பட்டது.

லாக் டவுன் நேரத்தில் விதிகளை மீறி எடுத்துவரப்பட்ட மது பாட்டில்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோதமாக மது பாட்டில்களை காரில் எடுத்துவந்ததாக ரம்யா கிருஷ்ணனின் கார் டிரைவர் செல்வகுமாரை போலீசார் கைது செய்ததாகவும் பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பலரும் விவாதித்து வரும் நிலையில் ரம்யா கிருஷ்ணன் தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *