இன்று கடைசி ஒருநாள் போட்டி: தொடரை முழுமையாக வெல்லுமா இந்தியா?

Published On:

| By admin

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான கடைசி ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 11) பகல் 1.30 மணிக்கு அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் இன்றி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் மோதுகிறது.
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (பிப்ரவரி 11) நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது ஆட்டத்தில் போராடி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸைத் தோற்கடித்தது.
பேட்டிங்கைப் பொறுத்தவரை முதல் இரு ஆட்டங்களிலும் விராட் கோலி ஏமாற்றினார். இந்த ஆட்டத்திலாவது அவர் ரன் மழை பொழிவாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
பந்து வீச்சை எடுத்துக்கொண்டால் முதல் ஆட்டத்தில் சுழல் சூறாவளிகள் அமர்க்களப்படுத்தினர். கடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா நான்கு விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பதால் இன்றைய ஆட்டத்திலும் பவுலர்களின் தாக்கம் மேலோங்க வாய்ப்புள்ளது. தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரை ஒருநாள் கிரிக்கெட்டில் சமீப காலமாக சொதப்புகிறது. கடந்த 17 ஆட்டங்களில் 11இல் அந்த அணி 50 ஓவர்களை முழுமையாக பேட் செய்யவில்லை. அதற்குள் சுருண்டு விடுகிறது. இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவை 237 ரன்களில் கட்டுப்படுத்தி அதைகூட நெருங்க முடியாமல் 193 ரன்னில் அடங்கியது.
ஆறுதல் வெற்றி முனைப்புடன் களம் காணும் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று மூன்றாவது ஆட்டத்தில் மோதுகிறது.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share