இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற கோரமான விபத்து, எப்போதும் ஏதாவது சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும் தமிழ் சினிமாவை மௌனத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அசிஸ்டண்ட் இயக்குநரான கிருஷ்ணா, ஆர்ட் அஸிஸ்டெண்டான சந்திரன். புரொடக்ஷன் அஸிஸ்டெண்டான மது ஆகிய மூவரும் உயிரிழந்திருக்கும் சம்பவம் மொத்த சினிமாவையும் ஆட்டிப்பார்த்துவிட்டது. இதில் கமல்ஹாசனுக்கும், ஷங்கருக்கும் அடிபட்டதாக வெளியான தகவலால் மேலும் கவலை ஏற்பட, ஒவ்வொருவரும் ஃபோன் செய்து இந்தியன் 2 ஷூட்டிங்கில் பங்குபெற்ற அனைவரையும் விசாரித்து வருகின்றனர்.
“மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும். எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
ராட்சத கிரேன் மூலம் லைட் செட் செய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றதை முதல் முதலில், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே மின்னம்பலத்தில் [இந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/entertainment/2020/02/19/72/accident-in-indian-2-shooting-spot) என்ற செய்தியில் தெரிவித்திருந்தோம். அதிக உயரத்தில் ஏற்றப்பட்ட கிரேனை, முன்னோக்கி நகர்த்தச் சொல்லி கட்டளை வந்ததாலேயே, அப்படி நகர்த்தியபோது விபத்து நடைபெற்றது என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், காவல் துறை தரப்பில் கிரேன் ஆப்பரேட்டரின் மீது மூன்று செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது அந்த கிரேன் ஆப்பரேட்டர் தலைமறைவாக இருப்பதால் காவல்துறையினரால் தேடப்படுவதாக தெரிகிறது. மேலும், விபத்து நடைபெற்றபோது கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோர் ஸ்பாட்டிலேயே தான் இருந்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஸ்பாட்டில் இருந்தவர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.
**-புகழ்**�,