விமல், சூரி மீது கொடைக்கானல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சுற்றுலா தளங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அந்த வகையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கொடைக்கானலில் சுற்றுலா. பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், தடையை மீறி கொடைக்கானலுக்கு சிலர் செல்வது தெரியவந்ததால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் தடையை மீறி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று அங்குள்ள தனியார் மாளிகையில் 4 நாட்கள் தங்கியுள்ளனர். பாதுகாக்கப்பட்ட பேரிஜம் ஏரியில் மீனும் பிடித்துள்ளனர். ரசிகர்கள் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், ஏரியில் அவர்கள் மீன்பிடிக்கும்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதன் மூலம் இது தெரியவந்தது. இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வனத் துறையினர், அவர்கள் இருவருக்கும் தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இ-பாஸ் இல்லாமல் அவர்கள் வந்ததும், உள்ளூர் பிரமுகரின் வாகனத்தில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள் சூரி மற்றும் விமல் மீது , பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய, கோட்டாட்சியர் சிவக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதனுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் ஊரடங்கை மீறியது, இ-பாஸ் இல்லாமல் வந்தது, நோய் தொற்று பரப்பும் வகையில் செயல்பட்டதாக விமல், சூரி மீது 2 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் இன்று (ஜூலை 28) வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
**எழில்**
�,