சினிமா துறையைச் சார்ந்தவர்களுக்கும் பொது மக்களில் சிலருக்கும் இடையே நடைபெறும் சர்ச்சைகளும், பிரச்சினைகளும் புதிதல்ல. ஒரு காலத்தில் சினிமாவைச் சேர்ந்தவர்களுக்கு வீடு தர மாட்டோம் என்றெல்லாம் சென்னையின் பல இடங்களில் பிரச்சினைகள் உண்டாகும். ஆனால், இன்று அதெல்லாம் மிகவும் குறைந்துவிட்டது. சினிமா துறையைச் சேர்ந்தவர்களும் மனிதர்கள்தான் என்பதைப் புரிந்துகொண்டு அவர்களை பொதுமக்கள் சாதாரணமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். சினிமா துறையைச் சார்ந்தவர்களும், தங்கள் துறை தங்களுக்கு எவ்வித உயர் பதவியையும் கொடுத்து விடவில்லை என்பதை உணர்ந்து நகர்ந்து செல்கின்றனர். ஆனால், சமீப காலமாக சினிமா துறையைச் சார்ந்தவர்களின் மதம் குறித்த கேள்விகளை எழுப்புவதும், அதன்மூலம் அவர்களைத் தனிமைப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டாப் ஸ்டாராக இருக்கும் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் உட்பட தினமும் தொலைக்காட்சித் தொடரில் வந்து ஒவ்வொரு வீட்டு ஹாலிலும் பேசிக்கொண்டிருக்கும் ஜாக்குலினுக்கும் விதிவிலக்கல்ல.
நடிகை ஜாக்குலின் சமீபத்தில்தான் தொலைக்காட்சித் தொடரின் மூலம் அதிக ரசிகர்களை சம்பாதிக்கத் தொடங்கினார். அதன்மூலம், அவரது சோஷியல் மீடியா ஆக்டிவிட்டியும் அதிகரித்திருக்கிறது. ஷூட்டிங் இல்லாததால், வீட்டில் அதிக நேரம் இருக்கும் ஜாக்குலின் தனக்குப் பிடித்த தனது மனதுக்கு சரியென்று தோன்றும் பலவற்றையும் செய்து வருகிறாராம். அப்படி வீட்டுத் தெருவில் இருக்கும் நாய்களுக்கு உணவு கொடுத்ததன் மூலமாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கியிருக்கிறார்.
ஜாக்குலினின் ஸ்டோரியில் “மனிதர்களே… இன்று என் வீட்டுக்கு அருகில் இருப்பவரிடம் எனக்கு ஒரு சண்டை ஏற்பட்டது. நான் மிகப்பெரிய தவற்றை செய்திருந்தேன். தினமும் தெரு நாய்களுக்குச் சோறு வைப்பேன். அதை அவரது வீட்டு கேட்டின் முன்பு வைத்ததால், தெரு நாய்கள் அதிகமாகிவிட்டன. என் வீட்டிலும் நாய்கள் இருப்பதால், தெரு நாய்களைப் பார்த்து அவை எப்போதும் குலைத்துக்கொண்டிருந்தன. இதனால் எரிச்சலடைந்த எதிர்வீட்டுக்காரர் என்னிடம் சண்டைக்கு வந்தார். என்னுடைய தவற்றை உணர்ந்து நான் மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி செய்வதில்லை என உறுதியும் கொடுத்தேன். ஆனால் அதற்கு அவர் கொடுத்த பதில் என்னை ஆச்சரியம் அடைய வைத்தது” என்று கூறியிருக்கிறார்.
ஜாக்குலினிடம் சண்டைக்கு வந்த அந்த மனிதர் ‘வீடு புகுந்து சாத்திருவேன். ஆனா… இந்த மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருக்கிறாயே என்று பார்க்கிறேன்’ என ஜாக்குலினின் மதத்தைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜாக்குலின், “என் தவற்றுக்கு நானே காரணம். இதில் என் மதம் எங்கிருந்து வந்தது. முதலில் மனிதர்களாக இருங்கள்” என்று அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியிருக்கிறார் ஜாக்குலின். நாய் வளர்ப்பது என்பது பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு செயலாக இருந்தாலும், சென்னை போன்ற நெருக்கடியான நகரங்களில் நாய் வளர்ப்பது என்பது மிகவும் சவாலான செயல். இதனால் பாதிக்கப்படும் முதல் நடிகை ஜாக்குலின் இல்லை என்றாலும், அதற்காக மதம் வரை பேசப்பட்டது ஜாக்குலினாகத்தான் இருக்கும் என அவரது ஃபாலோயர்கள் ஜாக்குலினுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
**-சிவா**�,