2022 – எதிர்பார்க்கப்படும் படங்கள்!

entertainment

50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி, ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்கு என்கிற தமிழக அரசின் அபாய மணியை எதிர்கொண்டு 2022 ஜனவரி முதல் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது தமிழ் சினிமா.

கொரோனா தாக்கத்துடன் 2021 கடந்து போனது. 2022ஆம் ஆண்டின் தொடக்கமும் கொரோனா தாக்கத்துடனேயே ஆரம்பமாகியுள்ளது.

புது வருடம் பிறந்தாலே முதலில் வரும் பண்டிகையான பொங்கல் வெளியீடாக பல படங்கள் வரும். பொங்கல் விடுமுறை நாட்களில் தீவிர சினிமா ரசிகர்கள் ஒரு சில படங்களையாவது பார்த்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதெல்லாம் அந்தக் காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே ஒரு படமாவது வந்துவிடாதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாத சூழல் தமிழ் சினிமாவில் நிலவுகிறது. 2022 ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது

ரஜினிகாந்த் நடிக்கும் படம், இந்த வருடம் வெளிவர வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இதுவரை எந்த நிறுவனமும் அவர் நடிக்கும் படத்துக்கான அறிவிப்பை வெளியிடவில்லை.

மற்ற வியாபார முக்கியத்துவம் உள்ள கமல்ஹாசன், விஜய், அஜித் குமார், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய் சேதுபதி, சிலம்பரசன், ஜெயம் ரவி ஆகியோர் நடித்து கொண்டிருக்கும் படங்கள் இந்த வருடம் முழுமையும் வெளியாகக் கூடும்.

தெலுங்குத் திரையுலகம் தற்போது இந்திய படம் என்று சொல்லுமளவுக்கு இந்திப் படங்களுடன் போட்டி போட ஆரம்பித்துவிட்டது. சென்னை தென்னிந்திய சினிமாக்களின் பிறப்பிடமாக இருந்தது. மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பின்பு தெலுங்கு மொழி சினிமா உள்கட்டமைப்பு, படத்தின் பட்ஜெட், வியாபாரம் இவற்றில் தமிழ் சினிமாவைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது.

தமிழ் சினிமா, தெலுங்கு சினிமாவைக் காட்டிலும் பின்தங்கிவிட்டது என்பதை மறுக்க முடியாது. 2022ஆம் ஆண்டில் முன்னணி நடிகர்கள் நடித்துள்ள சில பெரிய படங்கள் அதை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

**பொன்னியின் செல்வன்**

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மறைந்த எம்ஜிஆர் உள்ளிட்ட பலரும் திரைப்படமாக எடுக்க முயன்று கைவிட்டனர். அதை லைகா நிறுவனத்தின் உதவியுடன் மணிரத்னம் வெற்றிகரமாக படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டார். ஒரு காலத்தில் தமிழில் வந்த சரித்திரப் படங்கள் சாதனைப் படங்களாக இடம்பிடித்தன. பல வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மணிரத்னம் என்கிற ஐகான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என முன்னணி நடிகர்களை இந்தப் படத்தில் இணைந்து நடிக்க வைத்துள்ளது. இம்மாபெரும் படைப்புக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

**விக்ரம்**

நான்காவது படத்திலேயே கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு பெற்றவர் லோகேஷ் கனகராஜ். இவருடன் கமல்ஹாசன் இணைந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ‘மாநகரம், கைதி, மாஸ்டர்’ என ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனை நிச்சயம் மாறுபட்ட விதத்தில் காட்டுவார் என்று படத்தின் அறிமுக வீடியோ உணர்த்தியது. விஜய் சேதுபதி, பகத் பாசில் எனச் சிறந்த நடிகர்கள் படத்தில் இருப்பதும் சிறப்பு. என்ன மாதிரியான ஆக்‌ஷன் படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

**பீஸ்ட்**

முன்னணி நடிகர்கள் இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரிவது காலத்தின் கட்டாயம். அந்த விதத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் விஜய் இணைந்திருக்கும் படம் இது. படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்துவருகிறது. ஏப்ரல் மாதம் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவையுடன் கூடிய த்ரில்லர் படங்களை இயக்கிய நெல்சன் இந்தப் படத்தையும் அப்படியே கொடுத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

**வலிமை**

அஜித் குமார் நடித்த படம் வெளிவந்து இரண்டு வருடங்களாகி விட்டன. மீண்டும் வினோத், அஜித் குமார் கூட்டணி என்ற அறிவிப்பு வந்தபோதே எதிர்பார்ப்பு எகிறியது. சமீபத்தில் வெளிவந்த டிரெய்லர் அதை இன்னும் அதிகமாக்கியுள்ளது. இந்த ஆண்டின் முதல் பெரிய படம் என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் படம் வெளிவர இருந்தது. இரண்டு வருடங்களாக அஜித் குமார் படத்துக்காகக் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்தப் படம் சரியான கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வெளியீட்டு தேதியை மறு தேதி குறிப்பிடாமல் வலிமை படக்குழுவினர் ஒத்திவைத்துள்ளனர்

**எதற்கும் துணிந்தவன்**

பாண்டிராஜ், சூர்யா கூட்டணி ‘பசங்க 2’ படத்தில் இணைந்தது. அந்தப் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்துக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. பசங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம். இந்தப் படத்தில் இருவரது கூட்டணியும் முழுமையாக இணைந்துள்ளது. கமர்ஷியல் படமா, வித்தியாசமான படமா என்பது படம் வரும்போதுதான் தெரியும். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் சம்பந்தமான படம் எனக் கூறப்பட்டாலும் அதைப் படக்குழு உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரி வெளியீடு என அறிவிக்கப்பட்ட படம், திட்டமிட்ட அடிப்படையில் வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

**மகான்**

இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ், இசை – சந்தோஷ் நாராயணன், நடிப்பு – விக்ரம், துருவ் விக்ரம், வாணி போஜன்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், அப்பா விக்ரம், மகன் துருவ் முதன்முறை இணைந்துள்ள படம். இப்படி சில முதன்முறை கூட்டணி இருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ‘ஜகமே தந்திரம்’ படத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்த கார்த்திக் சுப்பராஜ், இந்தப் படத்தில் மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விக்ரம் படம் என்றாலே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது தெரிந்த விஷயம். இந்தப் படத்தில் மகனும் இணைந்துள்ளதால், இருவருக்கும் மறக்க முடியாத படமாக இருக்க வாய்ப்புள்ளது.

**கோப்ரா**

இயக்கம் – அஜய் ஞானமுத்து, இசை – ஏ.ஆர்.ரஹ்மான், நடிப்பு – விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான்.

படம் தொடங்கி இரண்டு வருடங்களாகி விட்டாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் உள்ளது. கடந்த வருடத் தொடக்கத்தில் டீசர் வந்தபோது அது இன்னும் அதிகமாகியது. இன்றைய சூழலில் கோப்ரா தியேட்டரா, ஓடிடியிலா என்கிற குழப்பம் நிலவுகிறது

**மாறன்**

தனுஷ் நடித்து கடந்த வருடம் தியேட்டர்களில் வெளிவந்த ‘கர்ணன்’ மாறுபட்ட படமாக அமைந்தது. அதேநேரம் ஓடிடியில் வெளிவந்த ‘ஜகமே தந்திரம்’ ரசிகர்களை ஏமாற்றியது. அதனால், இந்த ‘மாறன்’ படம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தன் முதல் படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த கார்த்திக் நரேன் இந்தப் படத்தில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். படம் ஓடிடி வெளியீடு எனக் கூறப்பட்டாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை

**திருச்சிற்றம்பலம்**

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இருவரும் இணைந்த படங்கள் சுவாரஸ்யமான படங்களாக அமைந்தது போலவே இந்தப் படமும் அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

**வெந்து தணிந்தது காடு**

கவுதம் மேனன், சிலம்பரசன் கூட்டணி என்றாலே வெற்றிக்கான வாய்ப்பு இருக்கும். அவர்கள் இருவரும் முதன்முறை இணைந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஒரு எவர்கிரீன் காதல் படமாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. அவர்கள் கூட்டணியில் அடுத்து வந்த ‘அச்சம் என்பது மடமையடா’ தோல்வியைத் தழுவினாலும் ‘வெந்து தணிந்தது காடு’ அறிவிப்பு வந்ததிலிருந்தே ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வந்த ‘மாநாடு’ படத்தின் வெற்றி சிலம்பரசன் படத்துக்கான வர்த்தக மதிப்பை அதிகரித்துள்ளது

**டான்**

‘டாக்டர்’ பட வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடித்து வெளிவர உள்ள படம். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்ன மாதிரியான படமாக இதைக் கொடுக்கப் போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடம் உள்ளது. கல்லூரிக் கதை என்பது மட்டும் தெரிந்த விஷயம். சீக்கிரமே இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

**அயலான்**

ரவிகுமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் படம். கொரோனா பெரும் தொற்றுக்கு முன்பு தொடங்கிய இந்தப் படம், பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து கிராஃபிக்ஸ், விஎப்எக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன எனக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக இசையமைத்திருக்கிறார். இதனால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பு. தாமதமானாலும் தரமான படமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

**காத்து வாக்குல ரெண்டு காதல்**

‘நானும் ரௌடிதான்’ படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவன், அனிருத், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம். கூடுதலாக இந்தப் படத்தில் புஷ்பா புகழ் சமந்தா. படத்தின் டைட்டிலே இது காதல் படம்தான் என்று சொல்லிவிட்டது. எந்த மாதிரியான காதல் படம் என்பதுதான் எதிர்பார்ப்பே. ‘ரௌடி’ கூட்டணி எப்படியும் ஏமாற்றாது என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

**விடுதலை**

நகைச்சுவை நடிகரான சூரி முதன்முறையாக நாயகனாக நடிக்கும் படம். வெற்றி மாறன் இயக்கத்தில், இசை இளையராஜா என ஆரம்பத்திலேயே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பு.

இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தப் படம், எப்போது வெளியாகும் என்பதை தற்போதைய சூழ்நிலையில் உறுதிபட கூற முடியாது.

**- அம்பலவாணன்**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *