சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஈஸ்வரன்’. ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்திற்கு பிரச்னை மேல் பிரச்னை சூழ்ந்திருக்கிறது. எல்லா பக்கத்திலிருந்தும் படத்தை ரிலீஸாக செய்ய விடாமல் நெருக்கடி கொடுத்துவருவதாகச் சொல்லப்படுகிறது. என்னென்ன பிரச்னைகள் என்பதை விரிவாக பார்ப்போம்.
**பிரச்னை 01 :**
பொங்கல் விடுமுறை ஸ்பெஷலாக ஜனவரி 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் அதே நாளே, வெளிநாட்டு வாழ் மக்களுக்காக OLYFLIX எனும் ஓடிடி தளத்திலும் ஈஸ்வரனை வெளியிட முடிவு செய்திருந்தது படக்குழு. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் திரையரங்க உரிமையாளர்கள். அதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஓடிடியில் கொடுத்தால் எளிதில் ஹெச்.டி.குவாலிட்டியில் படம் இணையத்தில் லீக் ஆகிவிடும். அதனால், திரையரங்க வசூல் பாதிக்கும் என பிரச்னை செய்தார்கள். அதைத் தொடர்ந்து, ஈஸ்வரன் வெளியாகி முதல் மூன்று வாரங்களுக்கு எந்த ஓடிடியிலும் ஈஸ்வரன் வெளியாகாது என படக்குழு அறிவித்தது. அதன்பிறகு தான் பிரச்னை தீர்ந்தது.
**பிரச்னை 02 :**
ஜீவா நடித்த கொரில்லா படத்தை தயாரித்த விஜய் என்பவரிடம் சிம்பு படம் நடிப்பதற்காக அட்வான்ஸாக ஒரு தொகையை வங்கியிருக்கிறார். கொடுத்த அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தந்தால் மட்டுமே, படம் ரிலீஸ் செய்ய வேண்டும் என சங்கத்துக்குப் பிரச்னையை எடுத்துச் சென்று விட்டார். இந்தப் பிரச்னையை பேசி இறுதியாக, கொரில்லா தயாரிப்பாளருக்கு வரவேண்டிய 1கோடியே 65 லட்ச ரூபாயை இன்று செட்டில் செய்வதாகச் சொல்லியிருக்கிறது சிம்பு தரப்பு. அதனால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.
**பிரச்னை 03:**
சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்தப் படத்தினால் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பனுக்கு பெரிய அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால், நஷ்டத் தொகையை சிம்பு தரவேண்டும் என இவரும் தயாரிப்பாளர் சங்கத்தை நாடினார். தயாரிப்பாளர் சங்கமும் க்யூப் நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் ‘நாங்கள் அனுமதி கொடுக்கும் வரை ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது’ என கூறியுள்ளது. அதனால் கொந்தளித்த டி.ராஜேந்தர் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து ஆதங்கத்தை தெரிவித்தார். அதோடு, சிம்பு தரப்பில் ஏற்கெனவே சம்பளத்திலிருந்து 3.50 கோடி வரை விட்டுக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். எப்படியும், இன்று இறுதிக்கட்டத் தீர்வு எட்டிவிடும் என்று சொல்கிறார்கள்.
விஜய் நடிப்பில் மாஸ்டர் ரிலீஸாகும் நேரத்தில், சிம்புவின் ஈஸ்வரன் வெளியாவது யாருக்கும் விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் திரையரங்கத்தினர் ஒருபக்கமும், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இன்னொரு பக்கமும் குடைச்சல் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. எல்லாவற்றையும் தாண்டி ஈஸ்வரன் சொன்ன நேரத்தில் வெளியாகும் என்பதில் உறுதியாக இருக்காம் படக்குழு.�,