எந்திரன் கதை திருட்டு வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Balaji

எந்திரன் படத்தின் கதை திருட்டு வழக்கில் இயக்குநர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஷங்கர், இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் ஆகியோரது நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி நடை போட்ட திரைப்படம் எந்திரன்.

இதற்கு முன்னதாக 1996 ஆம் ஆண்டு *இனிய உதயம்* என்ற தமிழ் பத்திரிக்கையில் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய *ஜுகிபா* கதை வெளியானது. இந்த கதை 2007ஆம் ஆண்டு *தித்திக் தீபிகா* என்ற நாவலிலும் வெளியானது.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படம் ஜுகிபா கதையைத் திருடி எடுக்கப்பட்டதாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருவரது மீதும், காப்புரிமை சட்டப்படி புகார் அளித்திருந்தார்.

எனது கதையைத் திருடி எந்திரன் திரைப்படத்தை எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரை நீண்ட விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காவல்துறையினர் இறுதியில் எந்த வழக்கும் பதிவு செய்யாததால் எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில், ஷங்கர் மீதும், கலாநிதி மாறன் மீதும் கிரிமினல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு, இருவரும் எழும்பூர் 13அவது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 2011இல் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை தொடர்ந்து ஷங்கரும், கலாநிதி மாறனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக முறையிட்டனர். இதில் நாங்கள் கதையைத் திருடவில்லை. எனவே ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

இதனிடையே எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் எழும்பூர் நீதிமன்ற வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதோடு கடந்த 10 ஆண்டுகளாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்து வந்த நிலையில் 2019 ஜூன் 6ஆம் தேதி, தீர்ப்பு வழங்கிய நீதிபதி புகழேந்தி, கலாநிதிமாறன் மீது ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது என்று தெரிவித்தார்.

மேலும் இயக்குநர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது என்றும் கதை ஒரே மாதிரி இருப்பதாகக் கூறி கதைக்கும் படத்துக்கும் உள்ள 16 ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டி அதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாகத் தெரிகிறது. எனவே எழும்பூர் நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த ஷங்கருக்கு எதிரான வழக்கைக் காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தவும் நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.

அதோடு, இயக்குநர் சங்கர் பிரபலமானவர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது அங்குக் கூட்டம் கூடி இடையூறு ஏற்படும். எனவே தேவைப்படும்போது மட்டும் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானால் போதும். அனைத்து வாய்தாக்களுக்கும் ஆஜராகத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே கொரோனோ பரவல் காரணமாக, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான நீதிமன்றப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில், மீண்டும் குற்றவியல் விசாரணை தொடங்கவுள்ளது. இயக்குநர் ஷங்கர் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுத் தாக்கல் செய்த சிவில் வழக்கில் உயர் நீதிமன்றம் சாட்சியம் அளிக்குமாறு உத்தரவிட்ட பிறகும் இயக்குநர் ஷங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share