40 கதை சர்ச்சை: தள்ளிப்போகும் என்ன சொல்ல போகிறாய்?

Published On:

| By Balaji

இயக்குநர்களிடம் கதை கேட்கும் போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ பட வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்குகளுக்கும் தகவல் கூறப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 5 அன்று சென்னை தி. நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். இதில் பேசிய அஸ்வின், “நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான்” என்று கூறியிருந்தார். அஸ்வினின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் பலரும் அஸ்வினைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இப்படத்தை டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப் படக்குழு தீர்மானித்திருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படம், இந்த மாதம் வெளியாகாது என்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இப்படம் இதற்கு முன்பும் ஓரிரு முறைகள் தள்ளிப்போனதால் பேசாமல் படத்தின் பெயரை ‘என்ன தள்ளிப் போகிறாய்?’ என்றே வைத்துவிடலாம் என்கின்றனர் தமிழ் திரையுலக விமர்சகர்களும், விநியோகஸ்தர்களும்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share