விஷால், ஆர்யா நடிக்க ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் எனிமி. மிர்ணாளினி ரவி மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் படத்தை முடிப்பதற்காக இரத்தக் கண்ணீர் வடித்து வருகிறார்கள். அப்படி, படப்பிடிப்பில் என்னதான் நடந்தது?
இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடிப்பதற்கேற்ப கதையை தயார் செய்துவிட்டார் இயக்குநர் ஆனந்த் சங்கர். படப்பிடிப்பில் இரண்டு நடிகர்களுக்கு மத்தியில் எந்த உரசலும் வந்துவிடக் கூடாது என்பதற்காக இவரின் தேர்வு ஆர்யா & விஷால். இருவருமே நெருங்கிய நண்பர்கள். ஏற்கெனவே, பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ படத்தில் இணைந்து நடித்தார்கள். அதனால், எனிமி படமும் எந்த சிக்கலுமின்றி உருவாகிவிடும் என்கிற நம்பிக்கையில் படப்பிடிப்பை துவங்கினார்கள். இந்தப் படம் துவங்கும் போது, நிச்சயம் படத்தில் இப்படியெல்லாம் சிக்கல் வரும் என தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கடந்த வருட அக்டோபர் 16ஆம் தேதி முதல் கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் துவங்கியது படக்குழு. தொடர்ந்து, அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்கு துபாய் சென்றார்கள். மொத்தமாக 30 நாட்கள் ஷூட்டிங் என திட்டமிட்டே சென்றார்கள். ஆர்யா உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் துபாய் சென்றுவிட்டது. பின்னால் வந்து சேர்வதாக கூறிய விஷால் படப்பிடிப்புக்கு வரவே இல்லை. விஷாலின் சக்ரா படம் வெளியாகியிருந்த நேரம் அது. அந்தப் படத்தின் ரிசல்டினால் ஷாக்காகிவிட்டவர், எனிமி ஷூட்டிங்கிற்கு தாமதமாகச் செல்கிறார் என்கிறார்கள். அதனால் திட்டமிட்டதை விட தாமதமாகவே படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. படப்பிடிப்பு நடக்காத ஒவ்வொரு நாளுமே லட்சத்தில் தயாரிப்பாளருக்கு பண நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், எனிமி ஷூட்டிங்கில் வந்து கலந்துகொண்டு படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென காணாமல் போனார். மூன்று நாட்கள் போனில் தொடர்புகொண்டும் அவரைப் பிடிக்கமுடியவில்லை. அதன்பிறகு, அவரே வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஏழு மணிக்கு படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டிருந்தால் ஆர்யா உட்பட அனைவருமே படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறார்களாம். ஆனால், விஷால் மட்டும் 11.30 மணிக்கு மேல் தான் படப்பிடிப்புக்கு வருகிறாராம்.
ஒவ்வொரு நாளும் விஷாலை வைத்து படத்தை முடிப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்ததாக தயாரிப்பாளர் புலம்புவதாகச் சொல்கிறார்கள். அதனால், திட்டமிட்டதை விட கூடுதல் நாட்கள் படப்பிடிப்புக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. படத்தின் பட்ஜெட்டும் இதனால் எகிறிவிட்டதாம். இப்படி வந்து சிக்கிவிட்டோமே என கண்ணீர் வடிக்கிறார் இயக்குநர் ஆனந்த் ஷங்கர். படப்பிடிப்பை முடிக்க வேண்டுமென அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது, ஒருவழியாக துபாய் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியிருக்கிறது படக்குழு. இந்த தகவலை தயாரிப்பு தரப்பான மினி ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காகச் சென்னை திரும்பியிருக்கிறது படக்குழு. எந்த சேதாரமும் இல்லாமல் படத்தை முடித்துவிட வேண்டுமென்பதே படக்குழுவின் எதிர்பார்ப்பாக இருக்கிறதாம்.
**- தீரன்**
.�,