திரையுலகில் பிரபலமான நடிகைகளின் திருமண வாழ்க்கை ஒப்பந்தங்களும், திருமண வாழ்க்கையும் வெற்றிக்கோட்டை எல்லாரும் எட்டிப் பிடிப்பதில்லை. அபூர்வமாக ஒருசிலர் இறுதிவரை இல்வாழ்க்கையில் இணைந்திருப்பதும் நடக்கத்தான் செய்கிறது.
பணம், புகழ் தேவைக்கு அதிகமாக சேர்ந்த பின்னும் சரியான வாழ்க்கை துணையைத் தேர்வு செய்வதில் ஆண், பெண் பேதமின்றி தடுமாற்றங்களும், தோல்விகளும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றன.
நடிகைகள் த்ரிஷா, இலியானா ஆகியோர் திருமணம் நிச்சயமான பின் தங்களது ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை நீக்கி திருமண முறிவை வெளிப்படுத்தினர். அதே வழியை குழந்தை பிறந்தவுடன் நடிகை எமி ஜாக்சன் செய்துள்ளார்.
தமிழில் மதராச பட்டினம் படத்தில் அறிமுகமான எமி ஜாக்சன் குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். விக்ரமுடன் ஐ, தனுஷுடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி, உதயநிதியின் கெத்து, ரஜினிகாந்துடன் 2.0, பிரபு தேவாவுடன் தேவி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
எமி ஜாக்சனும், இங்கிலாந்து தொழில் அதிபர் ஜார்ஜ் பனயிட்டோவும் காதலித்து நெருங்கி பழகினர்.
இதில் எமி ஜாக்சன் ஒருகுழந்தைக்குத் தாயானார். இதையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 2019இல் எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஆனட்ரியேஸ் என்று பெயர் வைத்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜார்ஜ் பனயிட்டோவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து படங்களையும் திடீரென்று நீக்கி உள்ளார். இதையடுத்து இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகத் தகவல் பரவத் தொடங்கியிருக்கிறது.
**-இராமானுஜம்**
�,