Oமாஸ்டரின் அடுத்த பாடல் தயார்?

Published On:

| By Balaji

மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு படக்குழுவினர் அனைவரும் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும், அவையவை சென்று சேர வேண்டிய ஸ்டூடியோக்களுக்குள் தஞ்சமடைந்துவிட்டன. இசை வெளியீடு, டீசர் ரிலீஸ், டிரெய்லர் ரிலீஸ், திரைப்பட ரிலீஸ் ஆகியவற்றுக்குத் தயாரிப்பு தரப்பு ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் முன்பாக, விஜய் குரலில் வெளியான ‘ஒரு குட்டி ஸ்டோரி’ பாடலைப் போல இன்னொரு பாடலை ரசிகர்களுக்குக் கொடுக்க மியூசிக்கல் டீம் தயாராகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடலாக வெளியான ஒரு குட்டி ஸ்டோரி பாடல் ஸ்லோ பாய்சனாக விஜய் ரசிகர்களைத் தாண்டி பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது. 26 மில்லியன் பார்வையாளர்களால் இதுவரையில் ரசிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை 1.4 மில்லியன் ரசிகர்கள் வரை லைக் செய்து தங்களது ஆதரவைக் கொடுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து இன்னொரு பாடலையும் ரிலீஸ் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறது படக்குழு. இந்தத் தகவலை, பிரபல கிட்டாரிஸ்டான கெபா ஜெரேமியா வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்கள் பலரின் பாடல்களுக்கும் கிட்டாரிஸ்டாகப் பணிபுரிந்து தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் கெபா ஜெரேமியா. இவர் மாஸ்டர் படத்தின் முதல் பாடலிலும் பணிபுரிந்திருந்தார். இப்போது மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து மாஸ்டர் படத்துக்கான இன்னொரு பாடலிலும் பணிபுரிகிறார். அனிருத்துடன் இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள கெபா ஜெரேமியா, “அனிருத்துடன் ஒரு சூப்பர் கூல் டிராக்கில் பணிபுரிகிறேன்” என்று பதிவு செய்ததுடன், ‘MASTERSECONDSINGLE’ என்ற வார்த்தையையும் சேர்த்திருக்கிறார். எனவே, மாஸ்டர் படத்தின் இன்னொரு பாடல் தனியாக ரிலீஸாகும் செய்தி கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.

மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறும் என்றும், இம்முறை சென்னை நகரத்தில் இல்லாமல் தமிழகத்தின் தென்மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்த மாஸ்டர் தரப்பு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

**-சிவா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share