பிரபல நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் ‘ஃபேர் அண்ட் லவ்லி’ நிறுவனத்தின் அழகு சாதன பொருட்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
தமிழில் தனுஷுடன் இணைந்து ‘மயக்கம் என்ன’, சிம்புவுக்கு ஜோடியாக ‘ஒஸ்தி’ போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். சமீபத்தில் அவரது திருமணம் நடைபெற்ற நிலையில் அமெரிக்காவில் தற்போது வசித்து வருகிறார். அவரது கணவர் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது கருத்துக்களைப் பதிவிட்டு வரும் ரிச்சா, தற்போது‘ஃபேர் அண்ட் லவ்லி’ நிறுவனத்தின் அழகு சாதன பொருட்களுக்கு எதிராக கையெழுத்திடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் தனது பதிவில், **“ஆசியா முழுவதும் ‘ஃபேர் அண்ட் லவ்லி’ நிறுவனத்தின் அழகு சாதன க்ரீம், கறுப்பு நிறத்தைக் குறைக்க உதவும் என்று கூறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எங்கள் நிறத்தில் என்ன குறை இருக்கிறது என்று ‘ஃபேர் அண்ட் லவ்லி’ நிறுவனத்தால் கூற இயலுமா? நாங்கள் எதற்காக எங்கள் நிறத்தை மாற்ற வேண்டும்? நிறம் மாறினால் தான் அழகாக மாறுவோம் என்று நீங்கள் கூறுவதன் அர்த்தம் என்ன? உங்கள் விளம்பரங்கள் சிறுவயதிலேயே ஒருவரது உள்ளத்தில் நிறப்பாகுபாட்டை உருவாக்கும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்துகிறது. ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் நிறுவனம் தங்களது ‘ஃபேர் அண்ட் லவ்லி’க்ரீமின் உற்பத்தியை நிறுத்தம் செய்ய வேண்டும்.”** என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் **‘இது போன்ற அழகு சாதன பொருட்களின் பயன்பாட்டை முதலில் நிறுத்த வேண்டும். இந்த ட்யூப்களில் அடைக்கப்பட்டிருக்கும் இரசாயனம் நச்சுத்தன்மை வாய்ந்தவை. அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்’** என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
For F&L to be discontinued, we must first reduce demand. The packaging and product in these tubes contain harmful ingredients such as arsenic, lead and mercury.
Please share and sign the petition! ⬇️https://t.co/vJByKNzjDs pic.twitter.com/jJLaFBslDY
— Richa Langella (Gangopadhyay) (@richyricha) June 10, 2020
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்று 46 வயது நபர், டெர்ரக் சவுவின் என்ற போலீஸ் அதிகாரியின் நிறவெறித் தாக்குதலுக்கு ஆளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஜார்ஜ் ஃபிளாய்ட்டை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்த டெர்ரக் சவுவின், ஃபிளாய்ட்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் தனது காலை வைத்து பலமாக அழுத்தினார். ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை’என்று கெஞ்சியும், நிறவெறியில் ஊறிப்போன போலீஸ் அதிகாரியின் நியாயமற்ற தாக்குதலில் ஃபிளாய்ட் மரணமடைந்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இதனைப் பார்த்து அதிர்ந்த மக்கள் நிறவெறிக்கு எதிராகக் குரல்கொடுத்தனர். அமெரிக்க வீதிகளில் இறங்கி மக்கள் ஃபிளாய்ட்டின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடத் தொடங்கினர். இந்தப் போராட்டத்திற்கு உலகம் முழுவதுமுள்ள பல்வேறு மக்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் போன்றோர் ஆதரவு கொடுக்கத் தொடங்கினர். நிறவெறிக்கு எதிரான கண்டனங்களையும் அவர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
அந்த வகையில் தமன்னா உள்ளிட்ட சில நடிகைகள் இது தொடர்பாக பதிவிட்ட போது மக்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். ‘கறுப்பாக இருந்தாலும் வெள்ளையாக மாறலாம்’ என்று பிரபல நிறுவனங்களின் அழகு சாதன பொருட்களுக்கு ஆதரவாக விளம்பரங்களில் நடித்துவிட்டு, இப்போது நிறப்பாகுபாடு குறித்து கருத்து சொல்வதைக் குறிப்பிட்டு ரசிகர்கள் அவர்களை சாடினர். இந்த நிலையில் தான் நடிகை ரிச்சா, ‘ஃபேர் அண்ட் லவ்லி’ நிறுவனத்திற்கு எதிராக சமூகவலைதளங்களில் பதிவிட்டிருப்பதுடன், அதற்கு எதிராக கையெழுத்திடவும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”