வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடித்துள்ள ‘டேனி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி எழுதி இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘டேனி’. சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ‘மாஸ்டர் பீஸ்’, தமிழில் அர்ஜுன் நடித்த ‘நிபுணன்’ போன்ற சில திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிஜி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் படத்தின் ட்ரெய்லரை ‘மாஸ்டர்’படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று(ஜூலை 19) மாலை வெளியிட்டார். திகிலூட்டும் பின்னணி இசை, பரபரப்பான காட்சிகளுடன் வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீரியல் கில்லர் குற்றவாளியைப் பிடிக்க காவல்துறைக்கு உதவும் டேனி என்னும் போலீஸ் நாயை மையப்படுத்தி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் வேல ராமமூர்த்தி, வினோத் கிஷன், யோகி பாபு, அனிதா சம்பத் உள்ளிட்டவர்கள் பிற முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
‘டேனி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”