ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளான இன்று(24.02.2020) அவரது புகழைப் பேசும் பலவிதமான செயல்களில் தமிழகத்திலுள்ள அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். தங்கள் தரப்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதத்தில், அவரது வாழ்க்கைக் கதையை படமாக எடுக்கும் தலைவி படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரனாவத் இடம்பெற்றுள்ள போஸ்டரை ரிலீஸ் செய்திருக்கின்றனர். முதல் போஸ்டரில் அரசியல் ஆளுமையாக ஜெயலலிதா விளங்கியபோது இருந்த தோற்றத்தில் கங்கனா ரனாவத்தின் படத்தை ரிலீஸ் செய்திருந்தனர். இப்போது, ஜெயலலிதா அரசியல் வாழ்வில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் இருந்த அவரது தோற்றத்தில் கங்கனா இருக்கும் படத்தை ரிலீஸ் செய்திருக்கின்றனர்.
முதல் போஸ்டரில் ஜெயலலிதாவின் தோற்றத்தில் பாதிகூட பிரதிபலிக்காமல் இருந்த கங்கனா ரனாவத், இரண்டாவது போஸ்டரில் ஜெயலலிதாவாகவே காட்சியளிக்கிறார். எனவே, இந்தப் படங்கள் இன்றைய டிரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது. ரிலீஸானது இந்தப் படமாக மட்டுமே இருந்திருந்தால், நேர்மறையான கருத்துகளால் ஜெயலலிதாவின் இன்றைய பிறந்தநாள் கடந்துசென்றிருக்கும். ஆனால், இன்னொரு ஃபோட்டோவையும் கங்கனா டீம் ரிலீஸ் செய்து ஒருவித அசூயையை உருவாக்கியிருக்கின்றனர்.
கங்கனா ரனாவத்தின் புரமோஷன் டீம், கங்கனா எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் சென்று அவரது ஆக்டிவிட்டியை சோஷியல் மீடியாவில் தொடர்ந்து பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதன்படி, சமீபத்தில் ராமேஸ்வரம் கோவிலுக்குச் சென்று கங்கனா ரனாவது புனித நீராடிய ஃபோட்டோவையும் ரிலீஸ் செய்திருக்கின்றனர். கங்கனா என்றாலே ஜெயலலிதா எனுமளவுக்கு அவருக்கு புரமோஷன் செய்யப்பட்டிருப்பதால், ஜெயலலிதாவை கோவிலுடன் தொடர்புபடுத்தும்போது நினைவுக்கு வரும் கும்பகோணம் மகாமக நீராடலை இந்த ஃபோட்டோ சோஷியல் மீடியாவில் இருப்பவர்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பற்றிய படத்தில் அவரைப் பற்றிய அனைத்தும் இடம்பெறும் என்றால், மகாமகத்தின்போது கும்பகோணம் கோவிலில் நீராட ஜெயலலிதா வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் இறந்துபோன சம்பவங்களும் அதன் பின்விளைவுகளும் படத்தில் இடம்பெறுமா என்று கேள்வியெழுப்பிவருகின்றனர் நெட்டிசன்கள்.
�,”