தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவி வகிக்க தடை!

Published On:

| By Balaji

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கெளரவ செயலாளர் R.ராதாகிருஷ்ணன், துணை தலைவர் S. கதிரேசன் பொருளாளர் S.சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் பதவியை பயன்படுத்தி சங்க நடவடிக்கைகளை தொடர இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்ட கே.ராஜன்(பொருளாளர்)பி.டி.செல்வகுமார்(துணை தலைவர்) என்.சுபாஷ் சந்திரபோஸ்(கௌரவ செயலாளர்) ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி 2020 அக்டோபர் 9 ஆம்தேதி வெளியிட்டார்.

.

சங்க துணைவிதி 1 ன்படி தேர்தலில் நிர்வாகி பதவிக்கு போட்டியிடுபவர்கள் தேர்தல் அறிவிப்பு வெளியான தேதிக்கு முன்பு அதாவது ஐந்து ஆண்டுகளுக்குள் நேரடியாக தமிழ் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கவேண்டும். அவ்வாறு படம் தயாரிக்காத நிரந்தர உறுப்பினர்கள் நிர்வாகி பதவிக்கு போட்டியிட முடியாது என்பது விதி. ஆனால் இந்த தேர்தலில் R.ராதாகிருஷ்ணன்,

S. சந்திரபிரகாஷ் ஜெயின், S கதிரேசன் ஆகியோர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். இவர்கள் சங்க துணைவிதியின்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு ஐந்து ஆண்டுகளுக்குள் நேரடியாக தமிழ் திரைப்படங்களை தயாரிக்கவில்லை.

தேர்தல் அறிவிப்பு 2020ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று வெளியிடப்பட்ட பின்னர் R.ராதாகிருஷ்ணன் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 16ந் தேதியும், சந்திரபிகாஷ் ஜெயின் அக்டோபர் 17 ஆம் தேதியும் S.கதிரேசன் 20 ஆம் தேதியும் தலா ஒரு திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டும், எங்களது புகாரை பரிசீலிக்கவில்லை. சங்க விதிகளை மீறி மூன்றுபேரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர் என்பதால் இந்த மூன்றுபேரும் பதவிகளை வகிக்க தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை நேற்று(ஏப்ரல் 17) நீதிபதி பொங்கியப்பன் அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் A.R.L.சுந்தரேசன், தனஞ்செயன் ஆகியோர் வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில் மேற்குறிப்பிட்டுள்ள மூவரும் பதவி வகிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு சம்பந்தமாக தற்போதைய கௌரவ செயலாளர் R.ராதாகிருஷ்ணனிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது தீர்ப்பு வந்திருப்பது உண்மைதான். இதுசம்பந்தமாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள இருக்கிறோம் என்று கூறினார்.

**இராமானுஜம்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share