த்ரிஷ்யம்-2 திரை குடும்பத்துடன் நடிகர் மோகன் லால் வெளியிட்ட புகைப்படத்தை இந்திய அளவில் அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பையும் வசூலையும் இப்படம் குவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில், கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் த்ரிஷ்யம்-2 பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கடந்த மே 21ஆம் தேதி, தனது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷ்யம்-2 அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டு, இரண்டாம் பாகம் எடுக்கவிருப்பதை உறுதி செய்தார் மோகன் லால். த்ரிஷ்யம்-1ல் மோகன்லால், அவரது மனைவியாக மீனா, மகள்களாக ஹன்சிபா ஹாசன், எஸ்தர் அலி ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த சூழலில் இரண்டாம் பாகத்திலும் இவர்களே நடிக்கவிருப்பது மோகன்லால் இன்று வெளியிட்ட புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், த்ரிஷ்யம்-2 ஷூட்டிங்கிற்காக அண்மையில் சென்னையிலிருந்து மீனா கேரளா புறப்பட்டுச் சென்றார்.
அதன்படி தொழுபுழா பகுதியில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ‘த்ரிஷயம் 2’வின் ஜார்ஜ் குட்டி குடும்ப புகைப்படத்தை மோகன்லால் இன்று மதியம் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்துக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. அதோடு ட்விட்டர்வாசிகள் இப்புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் #Drishyam2 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
**-பிரியா**�,