சினிமாவில் அத்தி பூத்தார்போல் எப்போதாவது அதிசயம் நிகழ்வது வாடிக்கை. இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தைக் கொடுத்த படமாக நான் சிரித்தால், ஓ மை கடவுளே, சைக்கோ, ஆகிய படங்கள் இடம் பெற்றது. பிப்ரவரி 28 அன்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், கல்தா, இரும்புமனிதன், கடலில் கட்டுமரம், திரெளபதி ஆகிய படங்கள் வெளியானது. இந்த படங்களில் திரௌபதி மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டாம் இடத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளது.
சுமார் 60 லட்ச ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட திரௌபதி திரைப்படம் ஒரு கோடி ரூபாய்க்கு தமிழக திரைப்பட விநியோக உரிமை விற்பனை செய்யப்பட்டது. வெளிநாட்டு விநியோக உரிமை 15 லட்ச ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. பிற உரிமைகள் எதுவும் வியாபாரம் செய்யப்படவில்லை. இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் வரை இப்படி ஒரு படம் தயாரிக்கப்பட்டு வருவது சினிமா வியாபாரிகள் மத்தியில் கவனிக்கப்படவில்லை.
தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றி சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியாக இருக்கும். அதிலிருந்து இந்தப் படம் தனித்து நிற்கிறது. ‘ஜாதிகள் உள்ளதடி பாப்பா’ என்கிற ஒற்றை வரி சினிமா வட்டாரத்தை தாண்டி தமிழகத்தின் அரசியல் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியது. நட்சத்திர அந்தஸ்து, இயக்குநர் முக்கியத்துவம், நிறுவன பிரபலம் இவை எதுவுமே இல்லாத இந்தப்படம் சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ள ஜாதியை முன்னிலைப்படுத்தி அரசியல் இயக்கங்களை நடத்தி வருகின்ற தலைவர்களின் ஆதரவு “திரெளபதி” படத்திற்கு அளவுக்கதிகமாகவே இருந்தது. தணிக்கை குழுவில் இருந்து இந்தப் படம் தப்பி வெளிவருமா என்ற அச்சம் தயாரிப்பு தரப்புக்கு இருந்தது. அந்த அளவிற்கு இந்த படத்திற்கு எதிராக பொதுவெளியில் கண்டனங்களும் முறைப்படியான புகார்களும் குவிந்தது.
எல்லாவற்றுக்கும் சட்ட ரீதியான அணுகுமுறையில் பதில் கொடுத்து சில சமரசங்களை செய்துகொண்டு இந்தப் படம் தணிக்கை சான்றிதழ் பெற்று வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் வட மாவட்டம், கொங்கு மண்டலம், மத்திய மாவட்டமான திருச்சி மற்றும் திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதிகளில் இத்திரைப்படத்திற்கு பெரும்பான்மை சமூக மக்கள் சுயமாக விளம்பரத்தையும் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்கிற பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்த விளம்பரத்தை தயாரிப்பாளர் தனிப்பட்ட முறையில் செய்திருந்தால் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டியதிருக்கும். அப்படி ஒரு சூழல் இப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்படவில்லை.
படம் வெளியாவதற்கு முதல்நாள் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாமக நிறுவனர் ராமதாஸ் இருவரும் தனித்தனியாக இந்தப் படத்தை பார்த்து தங்களது கருத்துக்களை பகிரங்கமாக பொதுவெளியில் தெரிவித்ததன் பலன் மறுநாள் காலையில் திரையரங்குகளில் படம் வெளியானபோது இருந்தது. தமிழ் சினிமாவில் நீண்ட நாட்கள் ஓடி வசூல் சாதனை நிகழ்த்திய படங்கள் ஏராளம். அதிலிருந்து திரெளபதி படம் வசூல் ரீதியாக தனித்து நிற்கிறது. படத்தின் பட்ஜெட்டைவிட முதல் நாள் தமிழகத்தில் வசூலான மொத்தத் தொகை நான்கு மடங்காக இருந்தது. நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை என்பதே உண்மை. தமிழ் சினிமாவில் வசூல் என்பது சமச்சீராக இருக்கும். அதிலிருந்தும் இந்தப்படம் தனித்து நிற்கிறது.
செங்கல்பட்டு, கோவை இந்தப் பகுதிகளில்தான் ஒரு படத்தின் விலையும் அதற்கேற்ப வசூலும் அதிகரிக்கும். ஆனால், இந்தப்படம் தமிழகத்திலேயே மிக சிறிய பகுதியாக இருக்கக்கூடிய வட ஆற்காடு, தென் ஆற்காடு திருநெல்வேலி பகுதிகளில் விஸ்வரூபம் எடுத்தது. கடலூர், சேலம் போன்ற பகுதிகளில் பெண்களுக்கு என்று தனிக்காட்சி, அதற்கென்று தனி டிக்கெட் அச்சடித்தும் விற்பனை செய்யப்பட்டது. இதுவும் தமிழ் சினிமாவில் முதல் முறை என்று கூறலாம்
சேலம், திருச்சி, திருநெல்வேலி, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய விநியோகப் பகுதிகளில் திரெளபதி ஏரியா உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு அவர்கள் வாங்கிய விலையை காட்டிலும் 20% அதிகமாக முதல் நாளில் மொத்த வசூல் ஆனது. தமிழ் சினிமா விநியோகத் துறையில் இப்படி இதுவரை நடைபெற்றது இல்லை. முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் 360 திரையரங்குகளில் சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு மொத்த வசூல் செய்திருக்கிறது திரெளபதி.
**இராமானுஜம் **
�,”