ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், அதனை மீறி கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்ததாக திரௌபதி படத்தில் நடித்திருந்த ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, மக்கள் யாரும் வைரஸால் பாதிக்காத வண்ணம் கடும் கட்டுப்பாடுகள் இந்தியா முழுவதும் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன.
எனினும் சட்டத்திற்கு புறம்பாக சிலர் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அவர்களை பிடிக்கும் விதமாக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அந்த வகையில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்ததாக திரௌபதி படத்தில் நடித்த துணை நடிகர் ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 70க்கும் அதிகமான மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டது.
துணை நடிகராக தமிழ் சினிமாவில் இயங்கி வரும் அவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த செய்தி வெளிவந்ததை தொடர்ந்து திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில்,’அவர் என் நண்பர் தான். பெயர் ரிஸ்வான் ரிஸு. நடிகர், பலகுரல் மன்னன். சன் மியூசிக் முன்னாள் தொகுப்பாளர். இது கண்டிக்கத்தக்க ஒரு செயல். இதற்கான தண்டனையை அனுபவிக்க போகிறார். நான் எதிர்பாராத ஒரு செய்தி இது’ என்று கூறியுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”