தேர்தலால் சிக்கலில் டாக்டர் ரிலீஸ்: தள்ளிப்போக காரணம் ?

Published On:

| By Balaji

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘டாக்டர்’. இந்தப் படம் தேர்தல் காரணமாக தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகவும், அதற்கான ஒரு காரணமும் திரையுலகில் சொல்லப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படமானது வருகிற மார்ச் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரிலீஸ் ஆகுமா என்பதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது.

டாக்டர் படத்தினை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்தப் படத்தினை ரிலீஸூக்கு முன்பே 30 கோடி வரை விற்பனை செய்துவிட திட்டமிட்டிருந்தது தயாரிப்பு தரப்பு. ஏனெனில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் நஷ்டத்தினை செட்டில் செய்யவும், ஃபைனான்ஸியருக்கு தர வேண்டிய கடனைக் கொடுக்க வேண்டுமென்றால் முன்னமே பணம் கையில் தேவைப்படுகிறதாம். ஆக, டாக்டர் படத்திற்கான திரையரங்க ஏரியா விற்பனையில் இறங்கியிருக்கிறார் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ராஜேஷ். விநியோகஸ்தர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட சதவிகிதத்தை கையில் பணமாக தந்துவிடுகிறோம் என்று சொல்லி வருகிறார்கள்.

தேர்தல் களத்தில் தமிழகம் இருப்பதால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணமாக எங்கும் எடுத்துச் சொல்லமுடியாது. இந்நேரங்களில் பறக்கும் படைகள் தமிழகமெங்கும் உஷாராக இருக்கும். இந்நேரத்தில் கோடிகளில் பணத்தை எடுத்து வருவதும் சிக்கல். அதற்கு கணக்கு காட்டுவதும் சினிமா துறையில் இயலாத ஒன்று. அதுபோல, திரையரங்க விநியோகஸ்தர்களும் ஃபைனான்ஸியர்களிடம் பணமாகத் தான் வாங்கி கொடுக்கவும் முடியும் என்னும் சூழல் நிலவுகிறதாம்.

படத்தை ரிலீஸ் செய்வதே வசூல் ரீதியாக லாபம் பார்க்க தான். இப்படியான தேர்தல் சூழலில் படத்தை ரிலீஸ் செய்வதிலேயே சிக்கல் என்றால் என்ன பண்ணுவது என யோசிக்கிறதாம் தயாரிப்புத் தரப்பு. அதனால், இரண்டு வாரங்கள் தள்ளிப் போய் வெளியிட யோசித்துவருகிறார்களாம்.

விநியோகஸ்தர்களிடம் கொடுக்காமல் நேரடியாக தமிழகமெங்கும் வெளியிடுவது மட்டுமே ஒரே வழி. அப்படி வெளியிட்டால், மெதுவாக கலெக்‌ஷனைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே கையில் வரவு வந்தால் மட்டுமே இருக்கும் கடனை செட்டில் செய்துவிட்டு ரிலீஸ் செய்யமுடியும். இப்படியான நிலையில், தயாரிப்பு தரப்பு என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துவருதாக சொல்லப்படுகிறது.

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். அனிருத் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் வெளியான மூன்று பாடல்களுமே இணையத்தில் செம ஹிட். ஒருவேளை டாக்டர் ரிலீஸ் தள்ளிப் போனால், ஏப்ரலில் ரிலீஸ் என இலக்கு வைத்திருக்கும் படங்களுக்கும் சிக்கலாகும். அந்தப் படங்களும் சிவகார்த்திகேயன் படத்தினால் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது.

– தீரன்

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share