கொரோனாவின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவருவதால் அடுத்தடுத்துத் தளர்வுகளை அறிவித்து வருகிறது அரசு. படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, திரையரங்கம் திறக்கவும் அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தைத் திரையரங்கில் வெளியிடுவதா அல்லது ஓடிடியில் வெளியிடுவதா என்பதில் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்.
பொதுவாக, திரையரங்கில் படத்தை வெளியிடவே அனைவரும் விரும்புவார்கள். வெறும் ஓடிடியில் மட்டும் வெளியானால் திரையரங்கங்களில் இருந்து வரும் லாபம் இல்லாமல் போகும். ஆனால், இப்போதைய சூழலில் மக்கள் திரையரங்குக்கு வருவார்களா எனும் சந்தேகம் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் இருக்கிறது. ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களின் படங்களென்றால் தியேட்டர் ரிலீஸை தைரியமாக முன்னெடுக்கலாம். மற்ற நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வெளியாகி வெற்றிப் பெறுவது சாத்தியமில்லை என்கிறது டிரேடிங் வட்டாரம்.
இப்படியான ஒரு குழப்பத்தில் இருக்கிறது டாக்டர் படக்குழு. கொரோனா இரண்டாம் அலையினால் ரிலீஸாக முடியாமல் பாதிக்கப்பட்ட முதல் படம் ‘டாக்டர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன் நடிப்பில் அனிருத் இசையில் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகிவருகிறது. படப்பிடிப்பு முடிந்து படமும் முழுமையாகத் தயாராகிவிட்டது.
புதிய தகவல் என்னவென்றால், டாக்டர் படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் நேரடியாக இணையத்தில் வெளியிட இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கூடுதலாக, ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடவும் திட்டமாம். இது ஒருபக்கம் இருக்க, வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி நேரடியாக திரையரங்கில் வெளியாவதாகவும் ஒரு தகவல் பரவிவருகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், டாக்டர் படக்குழுவுக்கு திரையரங்க உரிமையாளர் தரப்பிலிருந்தும், ரசிகர்கள் மத்தியிலிருந்தும் ஒரே கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. முதலாவதாக, திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் சூழல் நிலவுவதால் பொறுமைக் காத்து டாக்டர் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டுமென படக்குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். இதே, சூழலை சூரரைப் போற்று படமும் சந்தித்தது. திரையரங்குகள் திறக்கும் சூழல் நிலவும் நேரத்தில் படக்குழுவிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி ஓடிடிக்கு வந்தது சூரரைப் போற்று என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக, ரசிகர்களும் டாக்டர் படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டுமென சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு, ட்விட்டரில் #DoctorOnlyInTheatres எனும் ஹாஸ்டேக்கினையும் டிரெண்ட் செய்தனர். இது, படக்குழுவின் கவனத்துக்கும் சென்று சேர்ந்தது.
படத்தயாரிப்பாளரின் மனநிலை என்னவாக இருக்கிறது என்று விசாரித்தால், தியேட்டரா, ஓடிடியா என்பதை அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றே சொல்கிறார்கள்.
சூரரைப் போற்று படத்தை தியேட்டரில் வெளியிட கோரிக்கைகளும், பலகட்டப் பேச்சுவார்த்தைகளும் நடந்தது. ஆனால், எதுவும் வெற்றிபெறவில்லை. தனுஷின் ஜெகமே தந்திரம் படத்தை ஓடிடிக்கு வருவதை தனுஷூமே விரும்பவில்லை . ரசிகர்களைப் போலவே நானும் தியேட்டரில் வெளியிடவே விரும்புவதாக கூறினார். இருப்பினும், ஓடிடியில் வெளியானது ஜெகமே தந்திரம். தற்பொழுது, டாக்டர் ரிலீஸ் எப்படியாக இருக்கப் போகிறது? படக்குழுவின் முடிவு என்னவாக இருக்கப் போகிறது ? பொருத்திருந்துப் பார்க்கலாம்.
**- தீரன்**
�,