சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

entertainment

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் ‘டாக்டர்’. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மக்களை தியேட்டர்கள் பக்கம் அதிகம் வரவழைத்த படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது. படம் வெளிவந்து 13நாட்கள் கடந்த நிலையில் திரையரங்குகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வசூல் குறையாமல் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்க்கையில் அசுரத்தனமான வசூல் ரஜினிமுருகன் படத்திற்கு கிடைத்தது. அதன் பின்பு அவர் நடித்த அனைத்து படங்களுமே பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.

ஆனால் அந்த பட்ஜெட்டுக்கு இணையாக திரையரங்குகளில் எந்த படமும் வசூல் சாதனையை நிகழ்த்தவில்லை. டாக்டர் படம் திரையரங்குகளில் மக்களை திருவிழா கூட்டமாக கூட்டி கல்லா பொங்கிவழியும் நிலையை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் வெளியான முன்னணி நடிகர் நடித்த ஒரே படம் டாக்டர். இதன் வெற்றி என்பது சிவகார்த்திகேயனை காட்டிலும் தமிழ் சினிமாவுக்கு முக்கியமானது அப்போதுதான் அடுத்தடுத்து வெளியாக உள்ள பிரம்மாண்ட பட்ஜெட் படங்களின் வியாபாரம் நடக்கவும், திரையரங்குக்கு மக்கள் வரவும் உதவிகரமாயிருக்கும் என்பதால் திரையுலக பிரபலங்கள் டாக்டர் படத்தை புரமோட் செய்தனர்

தமிழகத்தில் 715 சென்டர்களில் (ஊர், நகரம்) உள்ள 1100 தியேட்டர்களில்

720 திரைகளில் டாக்டர் படம் திரையிடப்பட்டது. தமிழ் சினிமாவில் போட்டிக்கு படம் இன்றி எந்த ஒரு படத்திற்கும் இது போன்று திரையிட வாய்ப்பு கிடைத்தது இல்லை.

கொரோனா முதல் அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது விஜய்யின் ‘மாஸ்டர்’ படம்தான். தியேட்டர்களைக் காப்பாற்றியது. அதற்குப் பிறகு வந்த படங்களில் ‘சுல்தான், கர்ணன்’ படங்கள் ஓரளவிற்கு வசூலித்தது. இப்படங்கள் நல்ல வசூலைப் பெறுவதற்கு முன்பாக கொரோனா இரண்டாவது அலை வந்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது அலைக்குப் பிறகு ‘டாக்டர்’ படம் வசூல் என்பது ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு அதிக வசூல் செய்து வரும்படம் என கூறப்பட்டு வருகிறது தீபாவளி வரை புதிய படங்கள் வெளியிடப்படாது என்பதால் வசூல் குறையாது என்கின்றனர். டாக்டர் படம் வெளியான பின்பு ரிலீஸ் செய்யப்பட்ட அரண்மனை – 3 படத்தின் வசூல் மூன்றாம் நாளே அடங்கிப்போனது. அதனால் களத்தில் போட்டியாளர் இல்லாததால் டாக்டர் படவசூலுக்கு பாதிப்பு ஏற்படாது என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில்.

ரஜினிகாந்த், விஜய், அஜீத்குமார் ஆகியோர் படங்கள் கொரோனா காலத்திற்கு முன்பு செய்த வசூல் சாதனையை 50% இருக்கை அனுமதியில் டாக்டர் பட வசூல் நெருங்கி வருகிறது என கூறப்படுவது பற்றி விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது,

“டாக்டர் வசூல் அப்படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனும் எதிர்பாராத ஒன்று. அவர்களே அதிர்ச்சியடையுமளவுக்கு வருவாய் அதிகரித்து வருவதை மறுக்க முடியாது ரஜினி, விஜய், அஜீத்குமார் படங்களுக்கு முதல் மூன்று நாட்களுக்கு அதிகமான விலையில் டிக்கெட் விற்கப்படும். அப்படியெல்லாம் செய்து நிகழ்த்தப்பட்ட வசூல் சாதனையை டாக்டர் படம் சாதாரண கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு நிகழ்த்தியுள்ளது.

அரசு அனுமதி 50% இருக்கைகள் என்றாலும் நகர்புறங்களை தவிர்த்து மற்ற இடங்களில் இந்த நடைமுறை அமலாகவில்லை. படத்தின் வசூல் அதிகரிக்க நகரம் அல்லாத ஊர்களில் படத்தின் வசூல் அதிகரிக்க வேண்டும். அது டாக்டர் படத்திற்கு கிடைத்துள்ளது. நியாயமான டிக்கெட் கட்டணத்தில் அதிகமான பார்வையாளர்கள் திரையரங்கில் பார்த்த படமாக டாக்டர் சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர். தமிழகத்தில் இந்த படம் தற்போதைய நிலவரப்படி சுமார் 90 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது,

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0