விஜய் பட இயக்குநரால் டாக்டர் படத்துக்குக் கூட்டம் வருகிறதா?

Published On:

| By Balaji

சிவகார்த்திகேயன் – கே.ஜே.ஆர் ஸ்டூடியோ இணைந்து தயாரித்திருக்கும் படம் டாக்டர். இதில் சிவகார்த்திகேயன், வினய் பிரியங்கா, அருள்மோகன், யோகி பாபு, மிலிந்த் சோமன், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, அருண் அலெக்சாண்டர், தீபா சங்கர், அர்ச்சனா, ஜாரா வினத் ஆகியோர் நடித்துள்ளனர்.

கோலமாவு கோகிலா படத்துக்குப் பின் நெல்சன் திலீப்குமார் இயக்கிய படம் டாக்டர், இசை அனிருத். 2020ஆம் ஆண்டே படம் தயாராகிவிட்டாலும் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியிட முடியாமல் முடங்கி இருந்தது.

ஒருவழியாக கடந்த அக்டோபர் 9 அன்று தமிழகத்தில் சுமார் 720 திரைகளில் இந்தப் படம் வெளியானது. படத்தின் நெகட்டிவ் கிளியரன்ஸுக்காக ரூபாய் 26 கோடி ரூபாய் பைனான்சியர்களுக்கு செட்டில்மென்ட் செய்ய வேண்டியிருந்தது.

வழக்கம்போல கே.ஜே.ஆர், முயற்சி செய்தேன். முடியவில்லை. அடுத்து ஒரு படம் நடிக்க கால்ஷீட் கொடுப்பதாகக் கடிதம் கொடுத்தால் பைனான்சியர்களிடம் பழைய கடனுக்கு NOC வாங்கிவிடலாம்” எனக் கூற, மாற்றுவழியை யோசித்து முடிவு எடுத்து அமல்படுத்தி படம் வெளிவர ஏற்பாடு செய்தார் சிவகார்த்திகேயன்

ஏற்கனவே தனது படங்கள் வெளியாகும்போது தனது சம்பளத்தின் ஒரு பகுதியைவிட்டுத்தர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் பழைய நட்புக்களை ஓரங்கட்டி விட்டு லைகா தயாரிப்பு நிறுவனத்தின் உதவியை நாடி, பைனான்சியர்கள் கடனை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

கொரோனா இரண்டாம் அலைக்கு பின் அக்டோபர் 1 அன்று வெளியான ருத்ர தாண்டவம் திரையரங்குகளுக்கு மக்களைப் பயமின்றி வரவழைக்கும் சூழலை ஏற்படுத்தியிருந்தது

அக்டோபர் 9 அன்று டாக்டர் வெளியானபோது. ருத்ர தாண்டவத்தைக் காட்டிலும் கூடுதலான பார்வையாளர்கள் திரையரங்கில் கூடினார்கள். இது டாக்டர் படக்குழுவினரே எதிர்பாராத ஒன்று. தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் தான் டாக்டர் படத்தை இயக்கியுள்ளார் என்பதால் விஜய் ரசிகர்கள் அதிகளவு தியேட்டரை நோக்கி படையெடுத்தனர்

படம் பற்றிய விமர்சனங்கள் டாக்டர் படத்துக்கு முழுமையாக சாதகமாக இல்லை என்றாலும் அக்டோபர் 10 முதல் குடும்பங்களுடன் டாக்டர் படம் பார்க்க மக்கள் கூடினார்கள். தமிழகத்தில் இருக்கும் மொத்த திரையரங்குகள் 1,100. இதில் 720 திரைகளில் டாக்டர் படம் திரையிடப்பட்டதால் 7 நாட்களில் வசூல் ஆக வேண்டியது மூன்று நாட்களில் 720 திரைகள் மூலம் வசூல் ஆனது.

மேலும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே 50% இருக்கை அனுமதி என்பது அமல்படுத்தப்பட்டது. மற்ற திரையரங்குகளில் படம் பார்க்க வந்த அனைவருக்கும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இல்லையென்றால் முதல் வாரத்தில் சுமார் 40 கோடி ரூபாய் மொத்த வசூல் என்பது சாத்தியப்பட்டிருக்காது என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில். இந்த வசூல் என்பது சிவகார்த்திகேயன் என்கிற கதாநாயகனுக்கான வெற்றியா எனக் கேட்டால் இல்லை என்கின்றனர் அழுத்தம் திருத்தமாக.

காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதை இது எனக் கூறுகின்றனர். பிகில் படம் வெளியானபோது கார்த்தி நடித்த ‘கைதி’ வெளியானது. அந்தப் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அப்போது மாஸ்டர் படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். தங்கள் தளபதி படத்தை இயக்கி கொண்டிருப்பவர் இயக்கியுள்ள படம் எப்படி இருக்கிறது, அவர் வெற்றிபெற வேண்டும் என்கிற விருப்பத்தில் விஜய் ரசிகர் கூட்டம் கைதி படத்தைப் பார்க்க குவிந்தனர். படம் நன்றாக இருந்ததால் அந்தக் கூட்டம் தொடர்ந்தது, பிகில் படத்தைக் காட்டிலும் அதிகமான லாபம் சம்பாதித்தது. கைதி படத்துக்கான அதே சூழல்தான் தற்போது டாக்டர் படத்துக்கும்.

இந்தப் படத்தின் வசூல் தமிழகம் முழுவதும் சமச்சீராக இல்லை என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். டாக்டர் படத்துக்கு திரையரங்குகளில் கூடும் கூட்டம், வசூல் தமிழ் சினிமாவில் புத்துணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் வழங்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும் டாக்டர் திரைப்படம் அதிகபட்சமாக சுமார் 50 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. முதல் வார முடிவில் 40 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

**-அம்பலவாணன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share