மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பிரபல நகைச்சுவை நடிகர் சூரி ஆன்லைனில் பாடம் நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் இருக்கும் அனைத்து கல்வி நிலையங்களும் மூடி வைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலிலும் மாணவர்களின் நலன் கருதி பல பள்ளி, கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் வகுப்பில் நடிகர் சூரி பாடம் நடத்தியுள்ளார்.
மதுரை மாநகராட்சி நிர்வாகிகள் மற்றும் கல்வி அதிகாரிகளால் இந்த ஆன்லைன் வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டும் விதமாக நடத்தப்பட்ட இந்த வகுப்பில் நடிகர் சூரி கலந்து கொண்டு ‘சிரிப்போம் சிந்திப்போம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும் நடிகர் சூரி, கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், விடாமுயற்சி குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார். மாணவர்களும் முழு ஈடுபாட்டுடன் வகுப்பில் கலந்துகொண்டு தங்கள் குறும்புக் கேள்விகளை ஆசிரியர் சூரியிடம் கேட்டுத் தீர்த்துக் கொண்டனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,