தமிழகத்தில் விரைவில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுத்தேர்வுகள் தொடர்பாக நடிகர் மதன் குமார் தமிழக முதலமைச்சர் மற்றும் கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழில் அருவி திரைப்படத்தின் மூலமாக அடையாளம் காணப்பட்டவர் நடிகர் மதன் குமார்.
மேலும் தீரன், வெல்வெட் நகரம், பேட்ட போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்து வரும் அவர், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலிலும் பொதுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியிருப்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 12ஆம் வகுப்பில் கடைசி தேர்வு எழுத இயலாத சில மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுக்கான தேதிகளை அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலன் கருதி அரசு, தேர்வு முறையில் சில மாறுதல்களைக் கொண்டு வர வேண்டும் என்று நடிகர் மதன் குமார் தமிழக முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்கவிருக்கிறது. இந்த சமயத்தில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் பலரும் வெளியூரில் இருக்கும் அவர்களது தாத்தா பாட்டி வீடுகளிலும், அதே போன்று வெளியூர்களில் தேர்வு எழுத வேண்டிய ஏராளமான மாணவர்கள் சென்னையிலும் இருக்கிறார்கள். தற்சமயம் இந்த தேர்வுக்காக மட்டும் அவர்கள் இங்கும், இவர்கள் அங்கும் போக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நமக்கே தெரியும், சென்னையில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று நம்மால் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த மாணவர்கள் இங்கு வருவது அவர்களுக்கு எந்த அளவு பாதுகாப்பாக இருக்கும்? அதே போன்று சென்னையில் இருந்து தேர்வு எழுதுவதற்காக வெளியூருக்குப் போகும் மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அத்தகைய சூழலில் அவர்களுடன் பெற்றோர் எவ்வாறு போக முடியும்? அவங்க எதுக்காக இங்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்? அவங்களும் பாவம் இல்லையா? எல்லாருக்கும் இன்றைக்கு வேலை இருக்கிறது. வேலைக்குப் போய் கூட சம்பாதிக்க முடியுமா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.
எனவே இவற்றை எல்லாம் தயவுகூர்ந்து கவனத்தில் எடுத்துக் கொண்டு எங்களுக்கு உதவும் வண்ணம், இந்த மாணவர்களுக்கு உதவும் வண்ணம் மாணவர்கள் தங்கியிருக்கும் ஊர்களிலேயே பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்தால் இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி கோரிக்கை விடுத்துள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”