சூர்யா நடித்த ஜெய்பீம் படம் நவம்பர் 2 அன்று ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு ஆதரவும், விமர்சனங்களும், ரசிகர்களின் பாராட்டுக்களும் கிடைத்தன. ஒரு உண்மைச் சம்பவத்தை திரையில் சிறப்பாகக் கொண்டு வந்ததாக தமிழக முதல்வர், திரைப் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். அதே சமயம் சில குறியீடுகள் பற்றியும், ஒரு குறிப்பிட்ட சாதி பற்றியும் தவறான சித்தரிப்புகள் படத்தில் இடம் பெற்றதாக அந்த வன்னிய சமூக தலைவர்கள் மத்தியில் இருந்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில், அறிக்கைகளாக வெளிவந்து கொண்டுள்ளன. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தயாரிப்பாளர் தரப்பில் அந்த குறியீடு அகற்றப்பட்டுள்ளது.
திரைப்படம் தயாரிப்பதற்கு முன் அனைத்து சமூகத்தினரிடமும் என்ஓசி(NOC) வாங்கிய பின்னர்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் போல் தெரிகிறதே என்கிற விவாதம் இயக்குனர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருந்தபோதிலும் தீபாவளி படங்களில் சர்வதேச தமிழ் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக ஜெய்பீம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
பொதுவெளியில் சந்தித்துக்கொள்பவர்கள் ஜெய்பீம் பார்த்துவிட்டீர்களா? என்கிற கேள்வி தவிர்க்க முடியாத விவாதமாக மாறிவிட்டது. ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த வெளிவருவதற்கு முன்பு இருந்த பரபரப்பு, எதிர்பார்ப்பு அனைத்தும் முதல் காட்சி முடிந்து பார்வையாளர்கள் வெளியில் வரும்வரை மட்டுமே நீடித்தது. அதன் பின் எதிர்மறையான விமர்சனங்கள் பரவியது. ரஜினிகாந்த் திரையுலக வாழ்க்கையில் நாட்டுக்கு ஒரு நல்லவன், பாபா படங்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அந்தப் படங்களுக்கு பின் நேரடியான கிண்டல் கேலிக்கு உள்ளான முதல் படம் அண்ணாத்ததான். சிறுத்தை சிவா ஏற்கனவே இயக்கிய முந்தை படங்களின் காப்பி, வேறு சில படங்களின் காப்பி என கலந்து எடுத்துவிட்டார் சிவா என்ற விமர்சனங்கள் அதிகம் எழுந்தன.
இருந்தாலும் ரஜினிகாந்த் தன்னுடைய மேஜிக் நடிப்பால் படத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பவர்களும் உண்டு. உண்மையாக படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதிகப்படியான திரையரங்குகள், அதிகபட்ச டிக்கெட் கட்டணம் காரணமாக அண்ணாத்த வசூல் அதிகமாகியுள்ளது என கூறினாலும், ரஜினிகாந்த் படங்களுக்கான வழக்கமான பார்வையாளர் எண்ணிக்கை இல்லை என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
படம் வெளியான நவம்பர் 4 அன்று மால், மல்டிபிளக்ஸ், சினி பிளக்ஸ் திரைகளில் மட்டுமே அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது. பிற திரைகளில் அரங்கம் நிறையவில்லை என்பதே யதார்த்தமான உண்மையாக இருக்கிறது. வியாபாரம் அனைத்தையும் வெள்ளையில் செய்த சன் பிக்சர்ஸ் தமிழகத்தில் படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை, மொத்த வசூல் தொகையை வெளியிட்டால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.
விஷால், ஆர்யா நடித்த எனிமி படம் இளம் சினிமா ரசிகர்களை மட்டுமல்ல, குழந்தைகளையும் கவர்ந்துள்ளது ஆச்சர்யமானது. குழந்தைகளின் முதல் விருப்பமாக எனிமி படம் மாற்றம் கண்டு வருகிறது என்கிறார் திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திருச்சி ஏரியாவை சேர்ந்த எஸ்.வடிவேலன். இருந்தபோதிலும் எனிமி படம் சினிமா விமர்சகர்களால் கடுமையாகவே விமர்சிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி நடித்த எம்ஜிஆர் மகன் படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இருவரும் இணைந்து நடித்த உடன்பிறப்பே படம் கடந்த மாதம்தான் வெளியாகி தோல்வியை சந்தித்தது. மீண்டும் எம்ஜிஆர் மகன் படத்தில் இணைந்து நடித்து சோதிக்கின்றனர் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். சிவகார்த்திகேயனுக்கு தான் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களின் மூலம் வியாபார கதாநாயகனாக உயர்த்திய பொன்ராம் பின்னர் சீம ராஜா படத்தில் சிவகார்த்திகேயனை பள்ளத்தில் இறக்கிவிட்டார். அதேபோன்ற சூழலை எம்ஜிஆர் மகன் மூலம் சசிக்குமாருக்கு ஏற்படுத்தியுள்ளார் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
காமெடி நடிகர் சாம்ஸ் நடித்த ஆபரேஷன் ஜுஜுபி என்ற படம் வந்தது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. குறிப்பிட்ட சில ஊர்களில் சில காட்சிகள் மட்டுமே இந்த திரைப்படம் வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை ஞாயிற்றுக் கிழமை வரை தீபாவளி விடுமுறை நீடிக்கிறது. திங்கள் கிழமைதான் தியேட்டர்களில் வெளியான படங்களின் மொத்தவசூல் விபரங்களை அறியமுடியும். அதுவரை பரபரப்புக்காக முதல் நாள் 34.50 கோடி வசூல் என்கிற பொருத்தமற்ற புள்ளிவிபரங்கள் இணையதளங்களில், தொழில்முறை புரமோட்டர்களான ட்விட்டர் வாசிகள் கூறுவதை தவிர்க்க முடியாது. இன்றைய நிலவரப்படி எதிர்பார்ப்புடன் தீபாவளி படங்களை வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்கள் வசூல் அணுகுண்டாக இருக்கும் என எதிர்பார்த்தார்கள். இதுவரை அது யானை பசிக்கு சோளப்பொறி போன்று ஊசிப் பட்டாசாகவே இருக்கிறது. தொடர் அடைமழை காரணமாக ஊசிப்பட்டாசும் தொடர்ந்து வெடிக்காமல் போய்விடுமோ என்கிற அச்சம் புறநகர் திரையரங்க உரிமையாளர்களிடம் நிரம்பி வழிகிறது.
**இராமானுஜம்**
�,