’தர்மதுரை-2’ : என்ன சொல்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி

Published On:

| By Balaji

தர்மதுரை படத்தின் இரண்டாம் பாக அறிவிப்புக்கும், தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று அந்தப் படத்தை இயக்கிய இயக்குநரான சீனு ராமசாமி அறிவித்திருக்கிறார்.

2016ஆம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தர்மதுரை’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. படம் எதிர்பார்த்ததை காட்டிலும் வசூல் அதிகரித்தது. மேலும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் படத்தை பாராட்டினார்கள்.

இந்தப் படத்தைத் தயாரித்தவர் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அடிப்படையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருபவர். இந்தப் படத்தின் துவக்கத்திலேயே இவருக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையில் மோதல் எழுந்து.. படம் பாதியிலேயே நின்றது. குரு மரியாதைக்காக பின்பு பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்புதான் தர்ம துரை படம் தயாராகி வெளியானது.

இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தான் தயாரிக்கப் போவதாக தன்னிச்சையாக டிவிட்டரில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதிக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கப்போவதாக அறிவித்தார் என கூறப்படுகிறது. கூடுதல் தகவல்களை விரைவில் சொல்வதாகவும் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்துக் கருத்துக் கூறியிருக்கும் ‘தர்மதுரை’ படத்தின் இயக்குநரான சீனு ராமசாமி, தர்மதுரை’ பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. வாழ்த்துக்கள். ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல. ஆகவே அது சம்பந்தமான விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும் என்று சொல்லியிருக்கிறார்.

**இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share