வெற்றிகரமான வணிக இயக்குனராக இருந்த கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக தொழில் கற்ற சேரன், இயக்கிய முதல் படம் ‘பாரதி கண்ணம்மா’.இது, சமூகம் சார்ந்த படைப்பாக இருந்தது. கே.எஸ்.ரவிக்குமாரின் சிந்தனைகளுக்கு எதிரான படமாக இருந்தது.
திரையுலக கனவுகளுடன் சென்னைக்கு வந்த சேரன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் தயாரிப்பு நிர்வாகி உதவியாளராக பணியாற்றினார். இதன் தொடர்பு கொண்டே இவர் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அடுத்து அவர் இயக்கிய சேரன் பாண்டியன், நாட்டாமை படங்களுக்கும் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
இவர் இயக்கிய முதல் திரைப்படமான பாரதி கண்ணம்மா 1997 ஆம் ஆண்டு வெளியானது . கடுமையான எதிர்ப்பு சர்ச்சைகளை எதிர்கொண்ட இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இத்திரைப்படத்தினை தொடர்ந்து பொற்காலம்(1997), தேசிய கீதம்(1998) வெற்றிக்கொடி கட்டு(2000), பாண்டவர் பூமி(2001), ஆட்டோகிராப்(2004), தவமாய் தவமிருந்து(2005), மாயக்கண்ணாடி(2007), பொக்கிஷம்(2009) ,ஜே.கே.எனும் நண்பனின் கதை(2015), ராஜாதிராஜா(2016), திருமணம்(2016) என 19 ஆண்டுகளில் 12 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார்.
இயக்குனராக இவர் அடைந்த பிரபலத்தை தொடர்ந்து, நடிகராகவும் இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கிய ‘சொல்ல மறந்த கதை’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து நடிகராகவும் அறிமுகமானார். தமிழ் சினிமா கதாநாயகர்கள் நடிக்க மறுத்த கதை ஆட்டோகிராப் வேறு வழி இன்றி சேரன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியானது. இப்படம் மாபெரும் வெற்றியை சந்தித்தது. இப்படத்திற்கு நடிகராகவும், இயக்குனராகவும் பல விருதுகளை வென்றார்.
இந்திய அரசின் தேசிய விருதினை 2000-ஆம் ஆண்டில் “வெற்றி கொடி கட்டு” திரைப்படத்திற்கும், 2004-ஆம் ஆண்டு “ஆட்டோகிராப்” திரைப்படத்திற்கும், 2005-ஆம் ஆண்டு “தவமாய் தவமிருந்து” படத்திற்கும், இயக்குனராக தேசிய விருது பெற்றார். இவர் தமிழக அரசின் திரைப்பட விருதினை 8 முறை சிறந்த திரைப்படம், சிறந்த வசனம் மற்றும் எழுத்தாளர், சிறந்த இயக்குனர் என்ற பல துறைகளில் விருதுகளை வென்றிருக்கிறார்.
சேரன் இயக்கத்தில் வெளியான 12 படங்களில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஆகிய 6 படங்கள் மட்டுமே வணிகரீதியாக வெற்றியை பெற்றது. மனித ஊனம், சாதிப் பிரச்சினை, தேசிய அரசியல், வேலையின்மை, குடும்ப உறவில் தந்தையின் முக்கியத்துவம், கூட்டுக் குடும்ப உறவுகள் என சமூகம் சார்ந்த படங்களை இயக்கிய சேரன் தனது இயல்பு நிலையில் இருந்து கோடம்பாக்கத்து இளமை கதாநாயகனாக தன்னை கற்பனை செய்துகொண்டு நடித்து இயக்கிய படம் மாயக்கண்ணாடி.
சமூகம் சார்ந்த, அரசியல் சார்ந்த படங்களை இயக்கும் படைப்பாளியாக அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டு, மதிக்கப்பட்ட சேரன் மாயக்கண்ணாடி படத்தில் தன் சுயத்தை இழந்தார் என்று குறிப்பிடலாம். மண் சார்ந்த, மரபுசார்ந்த, சமூக அவலங்களை படமாக்கிய சேரன், மாயகண்ணாடி என்கிற பேண்டசி படத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டார்.
சேரன் என்கிற இயக்குனரின் இடம் இன்றுவரை தமிழ் சினிமாவில் நிரப்படாமல் இருக்கிறது. இருந்தபோதிலும் சேரன் நடிக்கும் படங்கள், பொதுப் பிரச்சினைகளில் அவர் கூறும் கருத்துக்கள் கவனிக்கப்படுகிறது. சிலநேரங்களில் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறிவிடுகிறது.
மிகச்சிறந்த படைப்பாளியை தமிழ் சினிமா இழந்திருக்கிறது. சிறந்த படைப்பாளிக்கான வாய்ப்பை வழங்க முன்னணி நடிகர்கள் மறுத்து வருகிறார்கள். இந்த நிலைமாறவேண்டும் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம் போன்ற சமூகம் சார்ந்த படங்களை இயக்கி சேரன் மீண்டும் வெற்றி கொடிகட்ட வேண்டும் என்பதே தமிழ் சினிமா பார்வையாளர்கள் விருப்பமாக இப்போதும் இருக்கிறது.
**-இராமானுஜம்**
�,”