�
இசை என்பது கடவுள் எனக்குத் தந்த பரிசு என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் வரும் மார்ச் 14-ஆம் தேதி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சென்னை எழும்பூர் தாஜ் கன்னிமாராவில் இன்று(மார்ச் 6) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இளையராஜாவின் சாதனை இசைப்பயணத்தைப் பாராட்டி மலேசியா துணை தூதரகம் மற்றும் மலேசியா சுற்றுலா மேம்பாட்டு வாரியம் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “இசை என்பது ஒரு பரிசு, அந்த பரிசை எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை பரிசு கொடுத்து இருக்கார். அவர்கள் எந்த வழியில் அதை டீயூன் போட்டு எடுத்து செல்கிறார்களோ அது தான் அவர்களுக்கான வழி” என்று கூறினார்.
பின்னர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பேசும் போது, ‘கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தால், மலேசியாவில் இசை நிகழ்ச்சி என்றதும் முதலில் இளையராஜா அச்சமடைந்தார். இப்போது அங்கே கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலேசியா விமானநிலையம் வருபவர்கள் என்று அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்’ என்றும் மலேசிய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”