மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் படம் த்ரிஷ்யம் 2. 2013-ல் வெளியான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றதால், தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ் என இந்திய மொழிகளிலும் , உலகளவில் சிங்களம் மற்றும் சீன மொழியிலும் வெளியானது. ரீமேக் ஆன அனைத்து மொழிகளிலும் வெற்றியும் பெற்றது.
எல்லா மொழிகளிலும் வெற்றி பெற காரணமே படத்தின் கதை தான். தற்பொழுது இரண்டாம் பாகமும் வெற்றிப் பெற்றுவிட்டதால் இதன் ரீமேக் பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டார்கள். முதல் ஆளாக முந்திக் கொண்டுவிட்டது தெலுங்கு சினிமா.
தெலுங்கில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் 2014ல் வெளியானது. வெங்கடேஷ் மற்றும் மீனா நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்ய தயாராகிவிட்டனர். முதல் பாகத்தை தெலுங்கில் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியிருப்பார். ஆனால், இந்த முறை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். மார்ச் மாதமே படப்பிடிப்பை துவங்கவும் இருக்கிறார்கள். இந்த தகவலை இயக்குநர் உறுதியும் செய்திருக்கிறார்.
வெற்றிமாறனின் அசுரன் பட தெலுங்கு ரீமேக்கை முடித்திருக்கும் வெங்கடேஷ், உடனடியாக த்ரிஷ்யம் 2வைத் துவங்குகிறார். எப்படியும், இந்த வருடமே இப்படத்தின் ரிலீஸையும் எதிர்பார்க்கலாம்.
தமிழில் கமல்ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸ் நடிப்பில் பாபநாசம் எனும் பெயரில் வெளியானது. கமல்ஹாசன் தேர்தலில் பிஸியாக இருப்பதால், தேர்தல் முடிந்து ரிசல்ட்டைப் பொறுத்து நிச்சயம் பாபநாசம் 2 உருவாகும் என்றே நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
– தீரன்
�,”