Iதிருஷ்யம்: அறமும் சட்டமும்!

entertainment

மு.இராமனாதன்

திருஷ்யம் என்பது வடசொல். காட்சி என்பது அதன் பொருள். கண்ணால் காண்பது காட்சி. ‘கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்’ என்று எம்.ஜி.ஆர் நமக்குச் சொல்லி வைத்திருக்கிறார்.

2013இல் வெளியான மலையாளப் படமான ‘திருஷ்ய’த்தின் விளம்பர வாசகமும் அதைத்தான் சொல்லியது- ‘காட்சிகள் ஏமாற்றும்’. படம் அந்த வாசகத்தின் விளக்கமாக அமைந்தது. 2021இல் வெளியாகியிருக்கும் திருஷ்யம்-2இன் விளம்பர வாசகம்- ‘விட்ட இடத்திலிருந்து’. முதல் படம் விட்ட இடத்திலிருந்து தொடருகிற இரண்டாவது படமும் மீண்டும் காட்சிகள் ஏமாற்றும் என்பதையே சொல்கிறது. ஆனால் இரண்டு படங்களின் பிரதானச் செய்தியும் அதுவல்ல.

இரண்டு படங்களும் சட்டத்தையும் அறத்தையும் எதிரெதிராக நிறுத்துகிறது. ஜார்ஜ் குட்டி (மோகன் லால்) அறத்தின் பக்கம் நிற்கிறான். அதற்காகச் சட்டத்தின் இடைவெளிகளைப் பயன்படுத்த அவன் தயங்குவதில்லை. திருஷ்யம்-2இல் அவன் அதை மேலும் லாவகமாகச் செய்கிறான். நமது சமூகத்தில் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்கள் சட்டத்தை வளைக்கிறார்கள். இதில் அறம் பலியாகிறது. மக்கள் மௌன சாட்சிகளாக இருக்கிறார்கள். ஜார்ஜ் குட்டியும் சட்டத்தை வளைக்கிறான். ஆனால் அதில் அறம் நிலை நாட்டப்படுகிறது. ரசிகர்கள் அங்கீகரிக்கிறார்கள். இரண்டு திருஷ்யங்களின் வெற்றியும் அதைத்தான் சுட்டுகிறது.

வெற்றிகரமாக ஓடிய படத்தின் தொடர்ச்சியாக அடுத்த படத்தை எடுப்பது என்பது புதிதல்ல. ஆனால் வெற்றி பெற்ற இரண்டாவது படங்கள் குறைவு. காரணம் இரண்டாவது படம் முதல் படத்தைத் தாண்டி நிற்க வேண்டும். திருஷ்யம்-2 அதைச் செய்கிறது. ‘திருஷ்யம்-1இன் வெற்றி எனக்கு வரமாகவும் சாபமாகவும் அமைந்தது’ என்று சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப். படம் ஈட்டித்தந்த புகழும் வருவாயும் வரம். இயக்குநரின் அடுத்த படம் முந்தைய படத்தைத் தாண்டாவிட்டால் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள். இது சாபம். தெரிந்து கொண்டுதான் இந்தச் சவாலை மேற்கொண்டிருக்கிறார் ஜோசப்.

திருஷ்யம்-1, இடுக்கி மாவட்டத்தில் ஒரு சிறு நகரத்தில் துவங்கும். ஜார்ஜ் குட்டி பள்ளிப் படிப்பைத் தாண்டாதவன். கேபிள் டிவி கடை நடத்துகிறான். பெரும் சினிமா ரசிகன். நிறையப் படங்கள் பார்ப்பவன். காவல்துறையின் புலனாய்வு எப்படியிருக்கும் என்று முன்கணிக்கிற ஆற்றலை அவன் இந்தப் படங்களிலிருந்தே பெறுகிறான். மனைவி ராணியின் (மீனா) மீதும், மகள்கள் அஞ்சுவின் (அன்ஸிபா) மீதும் அனுமோளின் (எஸ்தர்) மீதும் எல்லையற்ற பிரியம் வைத்திருப்பவன். எளிய மனிதர்கள். எளிய வாழ்க்கை. எளிய சந்தோஷங்கள். அதில் கல்லெறிபவன் வருண் (ரோஷன் பஷீர்). அஞ்சுவின் வகுப்பில் படிப்பவன்.

காவல் ஆணையர் கீதா பிரபாகரின் (ஆஷா சரத்) மகன். ஒரு பள்ளிச் சுற்றுலாவில் அஞ்சு குளிக்கிறபோது ரகசியமாக அவனது செல்பேசியில் படம் பிடித்துவிடுகிறான். அதை வைத்து அவளை மிரட்டுகிறான். அவள் வீட்டிற்கும் வருகிறான். தாயும் மகளும் அவனிடம் இறைஞ்சுகிறார்கள். அவன் அச்சுறுத்தல் எல்லை மீறுகிறது. ஒரு இரும்புக் குழாயால் அவனது செல்பேசியை உடைக்க முயற்சிக்கிறாள் அஞ்சு. தவறுதலாக அடி வருணின் தலையில் விழுகிறது. அக்கணமே அவன் உயிரும் பிரிகிறது.

அதன்பிறகு குடும்பத்தை நிலைகுலையாமல் நிறுத்துகிற நங்கூரமாகிறான் ஜார்ஜ் குட்டி. அவனே அலிபிகளை உருவாக்குகிறான். காவல்துறையால் அவற்றை உடைக்க முடியவில்லை. வருணின் சடலத்தைக்கூட அவர்களால் கண்டறிய முடியவில்லை. அது புதைக்கப்பட்டிருக்கும் இடம் ஜார்ஜ் குட்டிக்கு மட்டுமே தெரியும். விசாரணையின்போது காவலர்கள், பிள்ளைகளின் மீதும் அடியையும் உதையையும் பிரயோகிக்கிறபோது ஊர்க்காரர்களின் அனுதாபமும் ஜார்ஜ் குட்டியைக் காப்பாற்றுகிறது.

திருஷ்யம்-1 தெலுங்கிலும் கன்னடத்திலும்(2014), தொடர்ந்து இந்தியிலும் (2015) எடுக்கப்பட்டது. அங்கெல்லாம் படத்தின் பெயர் திருஷ்யம்தான். தமிழில் திருஷ்யம் என்கிற வடசொல் பயன்பாட்டில் இல்லை. அதற்குச் சற்று நெருக்கமான சொல் திருஷ்டி. ஆனால் திருஷ்டி எனும் சொல்லைச் சுற்றிப் போடுவதற்கும், பரிகாரம் காண்பதற்குமே நாம் பயன்படுத்துகிறோம். தமிழில் திருஷ்யத்திற்கு இணையான சொற்கள் உள்ளன. எனினும் எதனாலோ திருஷ்யம் தமிழுக்குப் பெயர்ந்தபோது அதற்குக் கதைக்களமான பாபநாசத்தின் பெயர் சூட்டப்பட்டது. திருஷ்யம் எல்லை கடந்து சீனத்திற்கும் சிங்களத்திற்கும்கூடப் போனது. அங்கே வேறு பெயர்தான் வைத்திருப்பார்கள். நாடும் மொழியும் பெயரும் என்னாவானாலும், படம் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக இருந்தது. ஏனெனில் தர்மம் வெல்ல வேண்டும் என்பதுதான் சாதரண மனிதர்களின் ஆசை. ஜார்ஜ் குட்டியும் அவனது எல்லா அவதாரங்களும் அந்த ஆசையை நிறைவேற்றினார்கள்.

பாபநாசம் (2015) தமிழ்ப் படத்தை இயக்கியதும் ஜோசப்தான். அவரிடத்தில் ஒரு செய்தியாளர், இரண்டு படங்களின் நாயக நடிகர்களையும் ஒப்பிடச் சொல்லிக் கேட்டார். ஜோசப் இப்படிச் சொன்னார்: ‘இரண்டு பேரும் நல்ல நடிகர்கள். மோகன்லால் பிறவி நடிகர். அவருக்கு இயல்பாகவே நடிப்பு வருகிறது. கமலஹாசன் அனுபவமுள்ள நடிகர். அவர் பயிற்சியின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.’

இந்த இயல்பு நவிற்சி மோகன்லாலுக்கு மட்டுமில்லை. மலையாள சினிமாவிற்கும் இருக்கிறது. அது திருஷ்யம்-2இலும் வெளிப்படுகிறது. படத்தின் பிற்பகுதியில் பல அசாதாரண சம்பவங்கள் நிகழுகின்றன. ஆனால் அதற்கான அடித்தளம் முற்பகுதியில் பல இயல்பான சம்பவங்களால் அடுக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் சிலர், ‘முற்பகுதி மெல்ல நகர்கிறது, ஆனால் பிற்பகுதி அதை ஈடுகட்டிவிட்டது’ என்று எழுதியிருந்தார்கள். மலையாளப்படங்களின் இயல்பு நவிற்சியோடு உள்ள ஒவ்வாமைதான் அவர்களை அப்படிச் சொல்ல வைத்திருக்க வேண்டும்.

திருஷ்யம்-2இன் விளம்பர வாசகம் ‘விட்ட இடத்திலிருந்து’ என்பதாக இருந்தாலும், அது முதல் படம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் தொடங்குகிறது. அஞ்சு கல்லூரியிலும் அனுமோள் ஒரு பெரிய ஆங்கிலப் பள்ளியிலும் படிக்கிறார்கள். ராணி அஞ்சுவின் திருமணத்தைப் பற்றிக் கவலைப்படுகிறாள். ஜார்ஜ் குட்டி இப்போது ஒரு திரையரங்க உரிமையாளர். ஒரு திரைப்படம் எடுக்கும் திட்டமும் இருக்கிறது. வீடு புதுப்பிக்கப்பட்டுவிட்டது. காரும் புதியது. இந்த வளமைக்குப் பின்னால் வருணின் கொலை என்கிற சிலுவை அந்தக் குடும்பத்தை, குறிப்பாக அஞ்சுவையும் ராணியையும் அழுத்திக்கொண்டே இருக்கிறது. இரண்டு பேரும் காக்கி உடையைக் கண்டாலே நடுங்குகிறார்கள். அஞ்சுவிற்கு துர்சொப்பனங்கள் வருகின்றன. வலிப்பு வருகிறது. இந்தத் துயரம் எதையும் ஊர்க்காரர்கள் அறியமாட்டார்கள்.

ஆறாண்டுகள் என்பது நீண்ட காலம். ஊர்க்காரர்களின் அனுதாபம் இப்போது வற்றிவிட்டது; அந்த இடத்தை அழுக்காறு நிறைத்துவிட்டது. வதந்திகள் கதைகளாக மாறி வலம் வருகின்றன. வருணுக்கும் அஞ்சுவுக்கும் தொடுப்பு இருந்தது; இதை அறிந்த ஜார்ஜ் குட்டி வருணைக் கொன்றுவிட்டான்; காவல்துறை சும்மாவிடாது. இப்படிப் பேசிக் கொள்கிறார்கள்.

காவல்துறையும் ஜார்ஜ் குட்டியின் வழக்கைச் சும்மா விடுவதாக இல்லை. புதிய ஆணையர் தாமஸ் பேட்டின் (முரளி கோபி) வழக்கைக் கையிலெடுக்கிறார். ஊள்ளூர் ஆய்வாளர் பிலிப் மாத்யூ( கணேஷ் குமார்) ஊரெல்லாம் தோண்டித் துருவுகிறார். இவர்களுக்கு வருணின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தைக் குறித்துத் துப்புக் கிடைக்கிறது. அது காவல் நிலையம். அந்த இடத்தைத் தோண்டுகிறார்கள். எலும்புகளைக் கண்டெடுக்கவும் செய்கிறார்கள். மறுபடியும் விசாரணை. மறுபடியும் வருணின் அம்மா வருகிறார். எல்லாம் இந்த இடத்தில் முடிந்திருக்க வேண்டும். ஆனால் காவல்துறையும் சட்டமும் எப்படியெல்லாம் முன்னகரும் என்பதைக் கணித்து ஜார்ஜ் குட்டி அதற்கேற்றவாறு பல காலமாகக் காய்களை நகர்த்தி வந்திருக்கிறான். அது படத்தின் கடைசி அரை மணி நேரத்தில்தான் கட்டவிழ்கிறது. மறுபடியும் சட்டத்தின் வழிகளின் ஊடாகவே போய்க் குடும்பதைக் காப்பாற்றுகிறான் ஜார்ஜ் குட்டி.

திருஷ்யம்-1 வெளியானதும் அது The Devotion of Suspect X என்கிற ஜப்பானிய நாவலின் பகர்ப்பு என்று சிலர் குற்றம் சாட்டினார்கள். 2005இல் வெளியான நாவல் 2011இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதைப் படம் எடுப்பதற்காக உரிமையை வாங்கி வைத்திருந்த ஓர் இந்தித் தயாரிப்பாளர் வழக்குத் தொடுக்கவும் செய்தார். ஆனால் வழக்கு நிற்கவில்லை. நாவலை வாசித்த ஆங்கிலச் செய்தியாளர் ஒருவர் நாவலுக்கும் திருஷ்யத்துக்கும் ஒற்றுமைகள் இருந்தாலும் திருஷ்யம் வேறு தளத்தில் இயங்குகிறது என்கிறார்.

ஜப்பானியக் கதையில் ஒரு தாயும் மகளும் வருகிறார்கள். தாயின் முன்னாள் கணவன் அவர்களைப் பணம் கேட்டு மிரட்டுகிறான். அப்போது நடக்கும் தள்ளுமுள்ளில் மகள் தாயின் கணவனைத் தவறுதலாகக் கொன்று விடுகிறாள். பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞன்,ஒரு பள்ளிக்கூட ஆசிரியர், மர்ம நாவல் விசிறி. அவன் சடலத்தை மறைக்கிறான். அலிபிகளைக் கட்டமைக்கிறான். நாவல் அந்த அலிபிகள் எத்துணை பலமானவை என்று விவரிக்கிறது. திருஷ்யத்திலும் கொலை நடக்கிறது. சடலம் மறைக்கப்படுகிறது. அலிபிகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் திருஷ்யத்தின் பலம் அலிபிகளில் இல்லை. அது படம் வெளிப்படுத்தும் ஆழமான குடும்ப உறவுகளில் இருக்கிறது. காவல்துறையின் அத்துமீறல்களைச் சொல்வதில் இருக்கிறது. தன் குடும்பம் சட்டப்படி தவறிழைத்திருக்கலாம்; ஆனால் தர்மத்தின்படி அவர்கள் நிரபராதிகள் என்கிற ஜார்ஜ் குட்டியின் நம்பிக்கையைப் படம் நம்பகத்தன்மையோடு சொல்கிறது. இப்படி எழுதினார் அந்தச் செய்தியாளர்.

திருஷ்யம்-2 பார்த்ததும் எனக்கு வேறொரு படம் நினைவுக்கு வந்தது. The Day of the Jackal (1973). பிரெஞ்சு அதிபர் சார்லஸ் டிகாலைக் கொல்வதற்காக ஒரு வலதுசாரித் தீவிரவாத இயக்கம் (OAS) ஒரு வாடகைக் கொலையாளியை நியமிக்கிறது. டிகால் இப்படியான எந்தக் கொலை முயற்சிக்கும் பலியானவர் அல்லர். முதுமையில், ஓய்வில் மெல்லப் பிரிந்தது அவர் உயிர். அதாவது படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே ரசிகனுக்குக் கதையின் முடிவு தெரியும். என்றாலும் ரசிகனால் படத்தோடு ஒன்ற முடிந்தது. அதற்குக் காரணம் ஜக்காலின் திட்டமிடல். 1963ஆம் ஆண்டு விடுதலை நாளில், பிரெஞ்சு அதிபர் ராணுவ வீரர்களுக்குப் பதக்கங்கள் வழங்குகிற நாளை ஜக்கால் தேர்ந்தெடுப்பான். மைதானத்துக்கு அருகே ஓர் அடுக்ககத்தையும் தேர்ந்தெடுப்பான்.

குறிப்பிட்ட நாளில் ஓர் ஊனமுற்ற ராணுவ வீரனாக வேடம் தரித்து எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடந்து அடுக்ககத்திற்குள் நுழைந்தும் விடுவான். கடைசி நிமிடத்தில் காவல் ஆணையர் லெபல் உள்ளே புகுந்து ஜக்காலைக் கொன்று விடுவார். இவையெல்லாம் கடைசி 30 நிமிடங்கள். மொத்தப் படமும் ஜக்கால்

தனது இலக்கை நோக்கி அங்குலம் அங்குலமாக முன்னேறுவதைச் சொல்லும். அவன் சுயம்பு. தன்னந் தனியனாகத்தான் செயல்படுவான். பிரான்ஸின் உளவுத்துறைக்கு OASஇன் திட்டம் தெரியவரும். லெபல் துரத்த ஆரம்பிப்பார். ஜக்கால் எல்லாக் கட்டங்களிலும் ஓரடி முன்னால் நிற்பான். உச்சகட்டத்தில் ஓர் அங்குலம் தவறிவிடுவான். கல்லறைத் தோட்டத்தில் ஜக்காலுக்கு லெபல் அஞ்சலி செலுத்துவதுதான் கடைசிக் காட்சி. திரையில் லெபல் மட்டும்தான் நின்றுகொண்டிருப்பார். திரைக்கு வெளியே ரசிகர்கள் அனைவரும் நிற்பார்கள்.

ஜார்ஜ் குட்டியும் ஜக்காலைப் போல தனியனாகத்தான் திட்டமிடுவான். அவன் சடலத்தைப் புதைக்கிற இடம் அவனுக்கு மட்டுமே தெரியும். மனைவி மக்களுக்குக்கூடத் தெரியாது. அப்படித் தெரியாமல் இருப்பதுதான் உங்களுக்குப் பாதுகாப்பு என்று சொல்லி விடுவான். இந்த வழக்கை காவல்துறை மீளாய்வு செய்யும் என்பதில் ஜார்ஜ்குட்டிக்கு எந்தச் சந்தேகமும் இராது. அவன் காவல்துறையின் ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு நகர்வையும் முன்கூட்டியே கணித்திருப்பான். அதற்கான மாற்றுத் திட்டமும் அவனிடத்தில் இருக்கும். ஆனால் காவல்துறை இதை உணரும்போது காலங் கடந்திருக்கும்.

ஜார்ஜ் குட்டியின் வழக்கும் விசாரணையும் முடிந்ததும் நீதியரசர் (அயூப்) காவல் ஆணையரிடம் சொல்வதாக ஒரு வசனம் வரும். ‘தீர்க்கப்படாத எத்தனையோ வழக்குகள் இல்லையா? இதையும் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்’. இது படத்தின் செய்தியல்ல. காவல் ஆணையர், வருணின் அம்மாவிடம் ‘அந்தக் குடும்பம் ஆறாண்டுகளாக உள்ளுக்குள் அனுபவித்து வரும் வேதனையே அவர்களுக்கு ஒரு தண்டனைதானே’ என்கிறார். இதுவும் படத்தின் செய்தியல்ல. இவை வெளிப்படையாகச் சொல்லப்படும் சமாதானங்கள். படத்தின் செய்தியை இயக்குநர் உரக்கச் சொல்வதில்லை. ஆனால் அது ரசிகனுக்குப் புரிகிறது. அந்தச் செய்தி: அறம் வெல்லும்.

**கட்டுரையாளர்**

**(மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com) **

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *