சென்னை தீவுத்திடலில் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி ராக் வித் ராஜா என்ற பெயரில் நேற்று இரவு நடந்தது. இதில் பல பின்னணி பாடகர்கள் பங்கேற்று இளையராஜாவின் இசையில் பாடினார்கள். இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா, யாத்ரா உடன் பங்கேற்றார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து, இளையராஜாவின் இசையில் வெளிவந்த ‛நிலா அது வானத்தின் மேலே’ பாடலை யுவன் சங்கர் ராஜா,கார்த்திக் ராஜா உடன் இணைந்து நடிகர் தனுஷூம் பாடினார். அதோடு இந்த பாடலை தனது மகன்களை வைத்து தான் ஒரு தாலாட்டு பாடலாகவும் மாற்றி உள்ளதாகக் கூறி இளையராஜாவின் அனுமதியோடு, இந்த பாடலின் மெட்டுக்கு ஏற்றபடி தான் உருவாக்கிய பாடல் வரிகள் கொண்டு தாலாட்டு பாடலாக பாடினார்.
இந்த நிகழ்வு இளையராஜாவை மட்டுமின்றி அங்கிருந்த பார்வையாளர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனுஷின் திறமையை பார்த்து இளையராஜா கைதட்டி பாராட்டினார்.
**இராமானுஜம்**