பிரபுதேவாவின் புதிய படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.
‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இப்போது பிரபுதேவா, ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படமான ‘ஜல்சா’வை இயக்கி வருகிறார். அபிஷேக் பிலிம்ஸ்ஸின் ரமேஷ் பிள்ளை படத்தை தயாரிக்கிறார்.
படத்தில் யோகிபாபு, சேத்தன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஷ்வின் விநாயகம் இசையமைக்கிறார். சென்னையில் ஈவிபி ஃபிலிம் சிட்டி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்ட நிலையில் படத்தில் ஒரு பாடல் காட்சியோடு படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார்கள்.
பிரபுதேவா படங்களில் நிச்சயம் ஒரு பாடல் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஹிட் மெட்டீரியலாக அமையும். அந்த வகையில் இந்த படத்திலும் அப்படியான ஒரு பாடல் நடனம் அமைத்து இருக்கிறார்கள்.
300க்கும் மேற்பட்ட டான்சர்கள் இதில் இருக்க, 50க்கும் மேற்பட்ட ரஷ்யாவை சேர்ந்த பின்னணி பெண் நடன கலைஞர்கள் இதில் இருக்கிறார்கள்.
சென்னையில் பின்னி மில்லில் பிரம்மாண்டமான முறையில் இந்த பாடல் படமாக்கப்பட்டு இருக்கிறது. Fast beat முறையில் இருக்கும் இந்த நடனத்திற்கான பாடலை தான் நடிகர் தனுஷ் பாடி இருக்கிறார்.
ஏற்கனவே தனுஷின் ‘மாரி2’ படத்தில் உள்ள ‘ரெளடி பேபி’ பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து கொடுத்திருந்தார். பாடலும் இப்பொழுது வரை இளைஞர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது. அந்த நட்பு ரீதியிலேயே தனுஷ் இந்த பாடலை பிரபுதேவாவிற்கு பாடிக் கொடுத்திருக்கிறார்.
**ஆதிரா**