தனுஷூக்கு அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘ஜெகமே தந்திரம்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் படம் நேரடியாக ஓடிடிக்கு வருகிறது. அதோடு, இந்த வருடத்தில் தனுஷூக்கு இரண்டு படங்கள் திரையரங்கில் வெளியாகிறது. ஒன்று, பரியேறும் பெருமாள் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படம் ஏப்ரல் 09ஆம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து, இந்தியில் அக்ஷய்குமாருடன் நடித்திருக்கும் ‘அட்ராங்கி ரே’ படமும் இந்த வருட ரிலீஸ் தான்.
தற்பொழுது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவருகிறார். ‘தனுஷ் 43’ என்றழைக்கப்படும் இந்தப் படத்தில் தனுஷூக்கு நாயகியாக மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தில் மாஸ்டர் படத்திலிருந்து மற்றுமொரு நடிகரும் வந்து இணைந்திருக்கிறார்.
மாஸ்டரில் விஜய்சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரத்தின் சின்ன வயது ரோலில் மகேந்திரன் நடித்திருந்தார். சொல்லப் போனால், மாஸ்டர் படத்தின் ஓபனிங் சீன் மகேந்திரன் நடித்திருக்கும் காட்சியிலிருந்து தான் துவங்கும். கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்திருப்பதாக ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார் மகேந்திரன். அதன் பரிசாக, தனுஷ் படத்தில் அடுத்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்தத் தகவலை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் ட்விட்டரில் அறிவித்து உறுதிசெய்துள்ளது. அசுரனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். படத்தில் சமுத்திரகனி, ஸ்ம்ருத்தி வெங்கட், கிருஷ்ணக்குமார் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள்.இந்தப் படத்திற்கான முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
அடுத்தக் கட்டமாக, ஹாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் ‘க்ரே மேன்’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்கிறார் தனுஷ். அதை முடித்துவிட்டு, மீண்டும் தனுஷ் 43 படத்தில் மகேந்திரனுடன் நடிக்கும் காட்சிகளில் இணைவார் தனுஷ்.
**-ஆதினி**�,”