வருடத்திற்கு இரண்டு படங்களாவது குறைந்தது கொடுத்துவிடும் நடிகர் தனுஷ். கமர்ஷியலாக ஒரு படம் வெளியானால், படு சீரியஸாக ஒரு படம் இருக்கும். ‘மாரி 2’ ஒரு பக்கம் ரிலீஸானால், அதே வருடம் ‘வடசென்னை’ ரிலீஸ் செய்திருப்பார். வெற்றிமாறனின் ‘அசுரன்’ படம் வெளியான அதே வருடம் ரொமாண்டிக் ஆக்ஷனாக ‘எனைநோக்கிப் பாயும் தோட்டா’ கொடுத்திருப்பார்.
கடைசியாக, தனுஷ் நடிப்பில் கடந்த வருட ஜனவரியில் பட்டாஸ் திரைப்படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ படம் வெளியாகியிருக்க வேண்டியது. கொரோனா அச்சுறுத்தலால் தனுஷூக்கு எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், சென்ற வருடத்தையும் சேர்த்து, இந்த வருடம் நான்கு படங்கள் தனுஷூக்கு திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
இந்த வருடத்திற்கான தனுஷின் முதல் ரிலீஸாக ‘ஜெகமே தந்திரம்’ படம் வெளியாகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுவருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து, ‘பரியேறும் பெருமாள்’ இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இறுதிக் கட்டப் பணிகள் தற்பொழுது நடந்துவருகிறது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அடுத்ததாக, கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் தனுஷ் 43வது படமானது ஜனவரி 8 முதல் படப்பிடிப்பு துவங்கி நடந்துவருகிறது. ஒரே ஷெட்யூலில் முழு படத்தையும் முடிக்கும் திட்டத்தில் இருக்கிறது படக்குழு. இதில் தனுஷூக்கு ஜோடியாக மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் படத்துக்கு இசையமைக்கிறார். சீக்கிரமே முடிந்து, இப்படமும் இந்த வருட இறுதிக்குள் வெளியாக இருக்கிறது.
இவைதவிர, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் பாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அட்ராங்கி ரே’. அக்ஷய்குமாருடன் தனுஷ் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்து தயாராகிவருகிறது. இப்படமும் இந்த வருடம் வெளியாக இருக்கிறது.
ஆக, இந்த வருடம் தனுஷூக்கு நான்கு படங்கள் வெளியாக இருப்பதால், தனுஷ் ரசிகர்களுக்குக் குஷியான வருடமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
**-ஆதினி**�,