மார்ச் 8ஆம் தேதியன்று மகளிர் தினத்தைக் கொண்டாடவும், மகளிரை மகிழ்ந்து போற்றவும் அனைவரும் ஆயத்தமாகி வருகின்றனர்.
சாமானிய மனிதன் முதல் இந்தியப் பிரதமர் வரை கொண்டாட்டத்துக்கான அந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நேரத்தில் ‘பெண்கள் பாதுகாப்பு’ குறித்து கேள்வியெழுப்பி அனைவரையும் உள்ளூர உறையவைத்துள்ளது ‘தேவி’ குறும்படம். பிரியங்கா பானர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள தேவி குறும்படத்தில் கஜோல், ஸ்ருதி ஹாசன், நீனா குல்கர்னி, ஷிவானி ரகுவன்ஷி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யூடியூபில் அறுபது லட்சம் பார்வையாளர்களைக் கடந்த ‘தேவி’ குறும்படம் மூன்றே நாட்களில் மூன்று லட்சம் லைக்குகளையும் வாங்கிக் குவித்துள்ளது.
பெண்கள் நிறைந்திருக்கும் அறையில் வாய் பேச முடியாத பெண் ஒருவர் பழைய டிவியை ஆன் செய்ய முயற்சி செய்வதாக தேவி குறும்படம் தொடங்குகிறது. அறையில் இருக்கும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாகக் காட்சியளிக்க ஜோதி (கஜோல்) பூஜை செய்துகொண்டிருக்கிறார். சில முதிய வயது பெண்கள் ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்க, இஸ்லாமிய வேடத்தில் இருக்கும் ஒருவர் தன் கால்களை வேக்ஸிங் செய்துகொண்டிருக்கிறார். டிவியில் பாலியல் வழக்கு குறித்த செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும்போதே மாடர்ன் உடையில் இருக்கும் ஸ்ருதி ஹாசன் மது அருந்துகிறார்.
திடீரென யாரோ வீட்டின் வெளியே காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்கிறது. தொடர்ந்து அனைவரும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். பற்றாக்குறையாக இருக்கும் இந்த அறைக்குள் புதிதாக ஒருவரை எப்படி சேர்த்துக்கொள்வது என்பதாக அவர்களது விவாதம் நீள்கிறது. புதிதாக வருபவர்களுக்காகப் பழைய நபர்கள் வெளியேறலாமே என்ற யோசனையை ஒருவர் முன் வைக்கிறார். இது தொடர்பான விவாதம் தொடர மீண்டும் பெல் சத்தம் கேட்கிறது, ‘இத்தனை பெண்களா? எல்லாருக்கும் எப்படி இடம் போதுமாக இருக்கும்?’ என்று ஜோதி தனக்குள் கேட்டுக் கொள்கிறார். ‘அப்பா, சகோதரன், கணவன் போன்றவர்களால் இந்த நிலைக்கு ஆளானவர்கள் மட்டும் இங்கே இருக்கட்டுமே’ என்று ஒரு யோசனை எழ, ‘அப்படியா? அப்போ நாங்க இங்கேயே இருக்கலாம்’ என்று கூறி சிலர் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்கிறார்கள்.
அதற்கும் எதிர்ப்பு கிளம்ப ‘சரி, எந்த வகையில் நமக்கு இப்படி நடந்தது என்பதைப் பொறுத்து முடிவு செய்யலாமா?’ என அந்த இஸ்லாமியப் பெண் கேட்கிறார். ‘நான் தீயில் எரித்துக் கொல்லப்பட்டேன்’, ‘கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டேன்’, ‘கழுத்தை நெரித்து’, ‘பீர் பாட்டிலால் தாக்கி, சாலையில் வீசப்பட்டு’, ‘கற்களால்’, ‘கத்தியால்’ என்று ஒவ்வொருவரும் தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை விளக்குகின்றனர்.
மீண்டும் விவாதம் நீள, நாம் அட்ஜஸ்ட் செய்யலாம் என்று கூறிக்கொண்டே காலிங்பெல் ஒலி கேட்டு அறையைத் திறக்கிறார் கஜோல். அங்கே அழைத்து வரப்பட்ட நபரைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியில் உறைய அறை எங்கும் நிசப்தம் நிலவுகிறது. இரட்டை சிண்டும், குட்டை ஃபிராக்கும் அணிந்த பிஞ்சுக் குழந்தை அங்கே கொண்டுவரப்படுகிறார். புதியவர்கள் வருவதற்கு முதலில் எதிர்ப்பு வெளிப்படுத்திய அந்த வயதானவர் அந்தக் குழந்தையை அள்ளி அணைத்துக்கொள்கிறார். திடீரென டிவி சரியாகி ஓட அடுத்த பாலியல் வன்புணர்வு செய்தி ஒளிபரப்பாகிறது.
தொடர்ந்து, “இந்திய நீதிமன்றங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாலியல் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 90 பாலியல் வன்புணர்வு குற்றங்கள் இந்தியாவில் நடப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 80 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் பெண் கடவுள்களை வணங்கும் நமது நாட்டில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிக அளவில் நடக்கிறது” என்ற வாக்கியங்களுடன் தேவி குறும்படம் முடிவடைகிறது.
தெய்வமாக மதிக்கும் தாய், தலைவியாய் நேசிக்கும் தாரம், தங்கமகள், அன்புத்தங்கை, தன்னிகரில்லா தோழி எனப் பெண்களைப் போற்றும் ஒவ்வொருவரையும் உறையவைத்துள்ளது. ‘நாம் நம்மவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோமே’ என்ற கேள்வியை, குற்ற உணர்ச்சியாக ஏற்படுத்தியுள்ளது.
பெண் என்பவள் கட்டிக்காக்க வேண்டிய சொத்தோ, தட்டி விளையாடத் தகுந்த பொருளோ அல்ல. பெற்ற மகளின் பிஞ்சு இதழ்களில் கூட காமச் சுவை தேடும் மனமிழந்த மனிதர்கள், இன்னும் எத்தனை உயிர்களை இழந்தால் திருந்துவார்களோ? கொண்டாடப்பட வேண்டியது மகளிர் தினங்களை அல்ல. மகளிரைத் தான் என்பதை தேவி குறும்படம் நினைவூட்டி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”