rதனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ படமானது ரிலீஸூக்கு தயாராகிவிட்டது. எப்படியும் ஓடிடி-யில் வெளியாவது உறுதியாகிவிட்டது. இப்படத்தைத் தொடர்ந்து, ‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘கர்ணன்’ படம் ஏப்ரலில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
அடுத்ததாக, தற்பொழுது தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘தனுஷ் 43’ படத்தில் நடித்துவருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஜனவரியில் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் தனுஷூக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்திற்கான முதல் கட்டப் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிகிறதாம். இதை முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு பறக்கிறார் தனுஷ்.
ரூஸோ சகோதரர்களின் இயக்கத்தில் ஹாலிவுட் படமான ‘க்ரே மேன்’ படத்தில் நடிக்கிறார் தனுஷ். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக இப்படம் தயாராகிறது. புது அப்டேட்டாக, இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் தனுஷ். கார்த்திக் நரேன் படத்தை அந்தரத்தில் விட்டுவிட்டு, க்ரே மேன் படத்திற்கு இரண்டு மாதம் படப்பிடிப்பிற்குத் தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது உருவாகிறதாம்.
தனுஷின் முதல் வெளிநாட்டுப் படமாக உருவானது ‘தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி பகிர்’. இது பிரஞ்சு மொழிப் படமாக காமெடி அதகளத்துடன் உருவானது. இந்தப் படம் போலவே, க்ரே மேன் படமும் நாவலை மையமாகக் கொண்டே உருவாகிறது.
**-ஆதினி**�,