மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு அமீர்கான் உருவாக்கவுள்ள திரைப்படத்துக்காக பாகுபலி எழுத்தாளர் கே.வி. விஜயேந்திர பிரசாத் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது.
78 வயதான எழுத்தாளர் கே.வி. விஜயேந்திர பிரசாத்தின் அடுத்த படம், மகன் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’. இப்படம் 2021ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயேந்திர பிரசாத் அமீர்கானின் மகாபாரத தழுவலுக்கான ஸ்கிரிப்டை எழுத ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் தான் உள்ளதாக கூறியிருக்கிறார்.
இது குறித்து கே.வி. விஜயேந்திர பிரசாத் கூறும்போது, மகாபாரதம் தொடர்பான பேச்சுவார்த்தை எனக்கும் அமிர்கானுக்கும் இடையே தொடங்கியுள்ளது. விரைவில் அதற்கான கதை உருவாக்க பணிகளில் நாங்கள் ஈடுபடுவோம். இதை பற்றி இப்போதே விரிவாக பேசுவது நன்றாக இருக்காது” என்று கூறியுள்ளார்.
அமீர் கான் சில காலமாகவே காவிய புராணக் கதை குறித்த திரைப்படத் தொடரைத் திட்டமிட்டு வருகிறார். ‘எச்.பி.ஓவில் வெற்றி பெற்ற பிரபல தொடரான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ போல பல கதைகள் நம் மண்ணில் உள்ளன’ என தொடர்ந்து கூறிவருபவர் அமீர். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ -இன் வெறித்தனமான ரசிகர்களும், அதற்கான சர்வதேச சந்தையும் அமீருக்கு பல சிந்தனைகளை திறந்துள்ளன. அப்படித்தான் இந்த மகாபாரத தழுவலும் தோன்றியிருக்கக்கூடும் என பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
விஜயேந்திர பிரசாத், ராஜமெளலியின் பிளாக்பஸ்டர் படமான பாகுபலியின் இரண்டு பாகங்களிலும் எழுத்தாளராக பணியாற்றியதற்காகவும், பாலிவுட்டில் பஜ்ரங்கி பைஜான், மணிகர்னிகா: ஜான்சி ராணி போன்ற திரைப்படங்களுக்காகவும் இந்தியாவெங்கும் அறியப்படுபவர். தற்போது ஏ.எல். விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்துக்கும் கே.வி. விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”