ஹாலிவுட் படமான ‘க்ரேமேன்’ படப்பிடிப்பை முடித்த தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப் படமும் விரைவில் முடிய இருக்கிறது.
இந்த நிலையில், அடுத்ததாக தனுஷ் நடிக்க இருக்கும் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.
தனுஷுடன் நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் நடிக்கிறார்கள். அதோடு, முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தனுஷ் – அனிருத் கூட்டணியானது கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தது. தற்போது, மீண்டும் அந்த ஹிட் கூட்டணி இணைந்திருப்பதால் படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தப் படமானது இரண்டு காலக்கட்டங்களில் நடக்கிறதாம். தனுஷின் கல்லூரி வாழ்க்கை மற்றும் அதன் பிறகான லைஃப் என்பது போல இருக்குமாம். நாயகனான தனுஷுக்கு இரண்டு காதல் கதைகள் படத்தில் இருக்கின்றன. இதில், கல்லூரி காதலியாக ராஷி கண்ணா வருகிறார். இவருக்கான போஷன் மிகவும் குறைவுதான் என்கிறார்கள். விரைவிலேயே படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
செப்டம்பர் மாத படப்பிடிப்பில் பிரியா பவானி ஷங்கர் கலந்துகொள்கிறார். தமிழில் பிரகாஷ் ராஜ் செலக்டிவ்வான படங்களில் மட்டுமே நடிக்கிறார். தற்போது, தனுஷ் படத்தில் இணைந்திருக்கிறார்.
இந்த வருடம் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ படங்கள் வெளியாகின. இதில், கர்ணன் மிகப்பெரிய ஹிட். ஜெகமே தந்திரம் சுமாரான வரவேற்பு பெற்றது. அடுத்ததாக, இந்தியில் அக்ஷய் குமாருடன் நடித்திருக்கும் ‘அட்ராங்கி ரே’ படம் வெளியாக இருக்கிறது.
மித்ரன் ஜவஹருடன் நான்காவது முறையாக கூட்டணி அமைக்கிறார் தனுஷ். குட்டி, உத்தமபுத்திரன் மற்றும் யாரடி நீ மோகினி என மூன்று படமுமே தனுஷுக்கு கமர்ஷியலாக ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
**- ஆதினி **
�,