அரசியல்வாதிகளை விமர்சிக்க வேண்டாம் என விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் இந்த மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகர் விஜய் காவி நிற திரையைக் கிழிப்பது போன்ற ஒரு காட்சி உள்ளது. இதனை அடுத்து இது பாஜகவைக் குறிக்கிறது என அந்த கட்சி எதிர்ப்பு தெரிவித்துக் காவல் துறையில் புகார் கொடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும், இந்த ட்ரைய்லரில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் இதனால் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. இதனால், தற்போது நடிகர் விஜய் சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ’அரசு பதவிகளில் உள்ளோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் யாரையும் எந்த காலத்திலும் புண்படுத்தும் விதமாகவோ அல்லது இழிவுபடுத்தும் விதமாகவோ பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் என எந்த ஒரு தளங்களிலுமே எழுதவோ பதிவிடவோ அல்லது மீம்ஸ் பகிரவோ கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த திருமணம் ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**