இந்த உலகமே பெண்களால் மட்டுமே இயங்குகிறது. பெண்கள் இன்றி எதுவும் இல்லை. உலகைப் படைத்ததே பெண்கள் தான். பாரத மாதா என்கிறோம், நதிகளுக்கு பெண்பால் பெயர்கள் வைத்திருக்கிறோம். இப்படியான பெண்களைப் புனிதப்படுத்தும் ஆண் சமூகத்துக்கு வீட்டின் அடுக்களையிலிருந்து வரும் சாட்டையடி படமே ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம்.
மலையாள மொழித் திரைப்படமாக ‘நீ ஸ்ட்ரீம்’ எனும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. ஜோ பேபி இயக்கத்தில் சலு கே தாமஸ் ஒளிப்பதிவில் சுராஜ் வெஞ்சரமுடு மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் நூறு நிமிட சினிமாவாக வெளியாகியிருக்கிறது. படம் வெளியாகி வாரங்கள் ஓடிவிட்ட நிலையில், வெகுஜன மக்களின் கவனத்தை தற்பொழுது ஈர்த்திருக்கிறது. இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காலம் காலமாக இந்திய பெண்களின் வலியை, பெண்களின் மீது திணிக்கப்படும் ஆணாதிக்கத்தை, உழைப்பு சுரண்டலை அழுத்தமாகப் படம் பேசுகிறது. கதை இதுதான்… திருமணத்திற்கான பெண் பார்க்கும் நிகழ்விலிருந்து படம் துவங்குகிறது. ஆசிரியரான சுராஜூக்கும், நடன ஆசிரியரான நிமிஷாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்கிறது. ஸ்விப்ட் காரில் துவங்கி சகல வரதட்சணைகளுடன் மாப்பிள்ளை வீட்டுக்கு மணப்பெண்ணாக வந்துசேர்கிறார் நிமிஷா. காலை எழுந்ததும் காபி போடுவதில் துவங்கி உணவு தயாரிப்பது, துணி துவைப்பது, இரவு கணவருடன் தாம்பத்யம் வரை அந்த வீட்டின் அங்கமாகிறார் நிமிஷா. எந்த அளவிற்கு என்றால், அந்த வீட்டின் கதவு, ஜன்னல், தூண் போல இவரும் ஒருவராக மாறிப்போகிறார்.
முதுகலை பட்டதாரியான சுராஜின் தாய், எவ்வாறு சுராஜின் தந்தைக்கு காலையில் பிரஷ்ஷூம் பேஸ்டும் எடுத்துக் கொடுத்து, குடிக்க தண்ணீர், சாப்பிட்ட தட்டிலேயே சாப்பிடுவது, வெளியே கிளம்பும் போது செருப்பு எடுத்து வைப்பது முதலியவற்றை செய்கிறாரோ அப்படியே தன்னுடைய மனைவியும் இருக்க வேண்டும் என விரும்புகிறார் கணவர் சுராஜ். அவரின் விருப்பம் மட்டுமல்ல, இந்திய ஆண்களின் பொதுவான எதிர்பார்ப்பாக இருப்பதற்கு ஒவ்வொரு காட்சியும் சாட்சியாகிறது. அம்மாவைப் போல மனைவி வேண்டும் என விரும்பும் ஆண்களின் உள்மனதில் கட்டியெழுப்பப்பட்ட கட்டமைப்பின் பிரதிபலிப்பை அடித்து நொறுக்குகிறது.
திருமணமாகி முதல் நாளில் கணவனும், மாமனாரும் உணவு அருந்தும் போது எச்சங்களைத் தட்டைச் சுற்றி சிதறவிடுவதை பார்த்து நிமிஷாவுக்கு முகம் மாறிப் போகிறது. அடுத்த நாளே சிறிய தட்டு ஒன்றையும் பக்கத்தில் வைக்கிறார். தட்டு இருந்தும் எச்சங்களை டேபிளில் இருவரும் சிதறவிடுகிறார்கள். பின்னர் ஒரு நாள் உணவகத்திற்கு கணவனும் மனைவியும் உணவருந்தச் செல்கிறார்கள். அப்போது, சாப்பிட்ட எச்சத்தைக் கூட அழகாக சிறிய தட்டில் அடுக்குகிறார் கணவர் சுராஜ். உடனே, விளையாட்டாக நிமிஷா ஒரு கேள்வி கேட்பார், ‘ வெளியே வந்தால் மட்டும் தான் டேபிள் மேனர்ஸா?’ என்பார். உடனே அவருக்கு உள்ளுக்குள் ஆண் எனும் தீ கொழுந்துவிட்டு எரியும். ‘நீ செய்தது தப்பு என ஒப்புக் கொள்’ என வற்புறுத்துகிறார் கணவர். இப்படியான ஒரு காட்சியை அத்தனை எளிதில் வெறும் காட்சிமொழியாக கடந்துசென்றுவிட முடியாது என்பதே உண்மை.
எத்தனை பேருக்கு வீட்டில் குடிக்கும் தண்ணீர் இருக்கும் இடம் தெரியும்? எத்தனை பெயருக்கு சர்க்கரைக்கும் உப்புக்கும் வித்தியாசம் தெரியும்? எத்தனை ஆண்களுக்கு கேஸ் ஸ்டவ் பற்றவைக்கத் தெரியும்? எத்தனை, எத்தனை என ஆண்களின் மீது சரமாரியான கேள்விகளைத் துளைத்து எடுக்கிறது ஒவ்வொரு காட்சியும். அன்றாட வாழ்வில் எதார்த்தமாக ஆண்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களின் பின்னால் இருக்கும் உளவியலைப் பேசி, படம் பார்ப்பவர்களை குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறது படம்.
இந்தப் படத்தில் மிக நுணுக்கமாகப் பெண்களின் மாதவிடாய் நாட்களை பேசியிருப்பது அபாரமானது. கணவரும் மாமனாரும் சபரிமலைக்கு மாலை போடுகிறார்கள். நிமிஷாவின் கெட்ட நேரம் மாதவிடாய் நாட்களை எதிர்நோக்குகிறார். சபரிமலைக்கு மாலை போட்ட நேரத்தில் மாதவிடாய் வந்தது, அந்த பெண் செய்த தவறாகவே இருவரும் அணுகுகிறார்கள். அந்த நாட்களில் மாலை போட்டிருக்கும் சாமியின் முன்னாடி வரக்கூடாது, எந்த பொருளையும் தொட்டுவிடக்கூடாது. ஒரே அறைக்குள், அதுவும் வீட்டுக்குப் பின்புறம் உள்ள அறையில் சிறைக்கைதி போல தனிமையில் இருக்க வேண்டும். இப்படியான ஒரு தருணத்தில் அவரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை துளியும் இந்த ஆண்சமூகம் சிந்திக்காது. அதற்கு ஒரு காட்சியாக, பள்ளிக்கு ஸ்கூட்டரில் சுராஜ் கிளம்புவார். சாரி, சாமி சுராஜ் கிளம்புவார். மழை பெய்து நின்றிருக்கும் என்பதால் வழுக்கி கீழே விழுந்துவிடுவார். பதறிப் போய் கணவரை தூக்கிவிட நினைப்பார் நிமிஷா. உடனே கையை உதறிவிட்டுவிட்டு, திட்டிவிட்டுச் செல்வார் கணவர் சுராஜ். ‘ இந்த நேரத்தில் சாமியைத் தொட்டால் தீட்டு என்பது தெரியாதா’ இந்த வார்த்தையைக் கேட்டதும் உடைந்துபோவார், கோவத்தின் உச்சிக்கே செல்வார் நிமிஷா. அதோடு நில்லாமல், இந்த தீட்டுக்குப் பரிகாரம் என்ன செய்யலாம் என லோக்கல் நம்பூதிரியிடம் கேட்பார் சுராஜ். மாட்டு கோமியம் குடிக்க வேண்டும் இல்லையென்றால் ஆற்றில் மூழ்கி குளிக்க வேண்டும் எனச் சொல்லுவார். இப்படியாக செல்லும் அந்தக் காட்சி.
படத்தில் மனைவியைக் கொடுமை செய்யும் கணவன் இல்லை, வரதட்சணைக் கேட்கும் மாமனாரும் இல்லை. வில்லத்தனம் செய்யும் நபர்களோ, எப்போதும் சண்டை சத்தம் கேட்கும் வீடும் கிடையாது. ஆனால், பேசாமலேயே காரியத்தை சாதித்துக் கொள்ளும் மிடில் க்ளாஸ் ஆண் சமூகமானது காட்சிமொழியாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, குக்கரில் சாப்பாடு வைக்க கூடாது, சாதம் வடித்து சமைக்க வேண்டும். வாஷிங் மிஷினில் துவைத்தால் எப்படி அழுக்குப் போகும்? கையில் துவைத்துப்போட வேண்டும், மிக்சியில் அரைத்த சட்னியை விட, அம்மியில் அரைக்கும் சட்னி தான் ருசியாக இருக்கும் என இந்திய சமூகத்தின் ஆணாத்திக்கத்தின் முழு முகமாக இருக்கிறார் நிமிஷாவின் மாமனார். அதை பெருமையாக நினைக்கும் அவரின் மனநிலையை மனநோயுடன் ஒப்பிடுவதே சரியாக இருக்கும்.
கணவனும், மாமனாரும் சாப்பிட்ட எச்சங்களை எடுப்பது, குப்பைத்தொட்டியில் விழும் கழிவுகளை வெளியே கொட்டுவது, பாத்திரம் கழுவும் சிங் உடைந்து ஒழுகும் கழிவுநீருடன் போராடுவது என இருக்கும் நிமிஷாவின் இரவு தாம்பத்தியம் எப்படி இருக்கும் எனும் இடம், படத்தை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டுச் செல்கிறது. கணவருடன் நெருக்கமாக இருக்கும் போது எச்சில் உணவுகளும், சிங் தொட்டியில் தேங்கும் கழிவு நீரின் சொட்டும் உடலுறவின் போது வந்துபோகும் காட்சியாகட்டும், உடலுறவுக்கு முன்பான தயார் (Foreplay) நிலையை விரும்பும் இடமாகட்டும் வேறு எந்தக் காட்சியாலும் நிரப்பிவிட முடியாத தருணங்கள்.
இறுதியாக, அதே கழிவு நீரினை கணவனின் முகத்தில் எறிந்துவிட்டு வீட்டை விட்டு கிளம்பும் இடத்தில், படம் புதிய வாசலைத் திறக்கிறது. பெண் சமூகம் முன்னேறிவிட்டது, எல்லாம் மாறிவிட்டது, முன்பு போல இப்போது இல்லை எனச் சொல்லும் சமூகம் மறைமுகமாக, பெண்மீது சுரண்டலை செய்துகொண்டுதான் இருக்கிறது என்பதையும் சொல்லாமல் படம் முடியவில்லை. இந்தப் படத்தில் காட்டப்பட்டது போல அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்கள் 85% எனவும், மீதமுள்ள 15% பெண்களின் வாழ்வில் மாற்றம் வந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்தப் படம், அந்த 15% பேரால் மட்டுமே மீண்டும் மீண்டும் பார்க்கப்படும். இந்தப் படம் எடுத்ததற்கான நோக்கமாக இருக்கும் 85% பெண்களை சென்று சேருமா என்பது கேள்விக்குறியான ஒன்றே! எது எப்படியோ, பெண்களுக்காக எடுக்கப்பட்ட இது ஆண்களுக்கான சினிமா. ஏனெனில், இந்தப் படத்திற்குப் பிறகு தாகம் எடுத்தால் தண்ணீரைத் தேடிச் சென்று குடிக்கவும், அலுவலகத்தில் சப்பிட்டதும் டிபன் பாக்ஸை கழுவி வீட்டுக்கு எடுத்துவர ஆண்கள் நினைத்துவிட்டால், இந்தப் படம் சிறிதேனும் வெற்றி பெற்றுவிட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.�,