தினேஷ் அகிரா
கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் நண்பன் ஒருவனிடம் மெல்பர்ன் டெஸ்ட்டில் ரஹானேவின் கேப்டன்ஷி ஜோராக இருந்ததென பாராட்டுகிற சாக்கில் கோலியை இடித்துரைத்து விட்டு சாவகாசமாக அமர்ந்தேன். நண்பன் கோலியின் ஓர் அதிதீவிர விசிறி. இன்னும் சொல்லப் போனால் எப்படி எனக்கு ரோஹித் ஷர்மாவோ அப்படி அவனுக்கு கோலி. கோலியா ரோஹித்தா என்கிற எங்களுடைய சமரில் புள்ளியியல் சிறையில் அடிக்கடி மாட்டிக்கொள்ளும் ரோஹித்தை மீட்பதற்கு ஸ்டீவ் ஸ்மித், தோனி என நேரத்துக்கு தகுந்தாற் போல பெயர்களை துணைக்கு அழைப்பது எனக்கு ஒரு வாடிக்கை.
அப்போதுதான் ஆசிரியரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி எட்டிப்பார்த்தது. **நேற்றைய தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டது** குறித்து ஒரு கட்டுரை எழுதித்தர முடியுமா?” ஆஹா என்னவொரு டைமிங்!
விவரம் தெரிந்த காலத்தில் இருந்து கிரிக்கெட் பார்த்து வருகிறோமே நமக்குப் பிடித்த வீரர்தான் யாரென கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்துப் பார்த்தேன். சட்டென இயான் பீபிள்ஸ்-ன் இந்த வரிகள் எங்கிருந்தோ ஓடிவந்தன. “They are no cricketers like those seen through twelve-year-old eyes.” காலசக்கரத்தைக் கொஞ்சம் பின்னோக்கி ஓட்டிய போது முல்தானில் விரேந்திர சேவாக் 299 ரன்களோடு சக்லனை எதிர்கொள்ளக் காத்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் 2008 க்கு flash forward அடித்தால் லிட்டில் மாஸ்டரை எதிர்முனையில் வைத்துக் கொண்டு பாந்தமான ஓர் இளைஞர் ஆஸ்திரேலிய மண்ணில் ஸ்கொயர் டிரைவ் ஆடிக் கொண்டிருந்தார். கொஞ்சம் உற்றுப் பார்த்ததில் ரோஹித் ஷர்மா எனத் தெரிந்தது. இன்னும் மூன்று நாட்களுக்குள் கட்டுரை வேண்டுமென ஆசிரியர் கேட்கிறார். ஆனால் எட்டியதூரம் வரை விராட் கோலி என்ற உருவம் மட்டும் மனக் கண்ணில் தெரியவே இல்லையே எனப் புலம்பிக் கொண்டிருந்தேன். இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் ஒரு ரசிகன் தன்னுடைய ஆதர்ச வீரரை எதன் அடிப்பையில் தீர்மானிக்கிறான்? வெறும் ரன்கள் மட்டுமா? ஆடும் நேர்த்தியா? தன்னை ஏதோவொரு விதத்தில் பிரதிபலிப்பவனாகவோ அல்லது தன்னுடைய நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆழ்மன சாகசக் கனவுகளுக்கு வடிவம் கொடுப்பவனாக இருக்க வேண்டும்.
எதற்கும் ஒரு வார்த்தை நெவில் கார்டஸ் இடம் கேட்டுவிடுவோம் என்று கூகுளைத் தட்டினால் “A true batsman should in most of his strokes tell the truth about himself.” என்கிறார் கார்டஸ். நான் பள்ளிக் காலத்தில் கிரிக்கெட் விளையாடும்போது எனக்குத் தெரிந்த ஒரே ஷாட் ஸ்கொயர் டிரைவ்தான். ரோஹித் ஷர்மாவை பிடித்ததற்கு இந்தக் காரணம் ஓகேதான். வேறென்ன காரணம்? என்னைப் போலவே ரோஹித்தும் முகத்தில் உணர்ச்சிகளை காட்டிக் கொள்ளாதவர். அவருடைய பேச்சு ஸ்பஸ்டமாகவிருக்கும் – எனக்கும் இதற்கும் ஏழாம் பொருத்தம்தான்.
சேவாக் இங்கு என்னுடைய ஆழ்மன சாகசக் கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் மாயமான். அட ஆண்டவா இதுவென்ன உளவியல் கட்டுரையா? விராட் கோலியைப் பற்றி எழுதுவதாக உத்தேசமே இல்லையா என நீங்கள் கத்தவேண்டாம். இப்போது ஸ்கொயர் டிரைவ் பிரச்சினைக்கு வருவோம். விராட் கோலி ஸ்கொயர் டிரைவ் ஆடி நீ பார்த்ததே இல்லையா என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. 2016 – ல் கோலியின் ஸ்கொயர் டிரைவ்களை பார்த்துவிட்டு தன்னுடைய All time eleven – இல் தனது ஆதர்ச வீரர் vishy – ஐத் தூக்கிவிட்டு கோலிக்கு இடமளித்த ராமச்சந்திர குஹாவின் பெருந்தன்மையும் எனக்கு நினைவுக்கு வராமல் எல்லாம் இல்லை. இவையெல்லாம் மூளைக்குத் தெரிகிறது. ஆனால் இதயத்துற்குள்தான் இறங்க மாட்டேன் என்கிறதே!
கிரிக்கெட்டில் lazy elegance என்றொரு சொல்லாடல் உண்டு. டேவிட் கோர், மார்க் வாஹ், ஜெயவர்த்தனே என ஒருவர்பின் ஒருவராக மனதிலிருந்து வரிசைகட்டி வருகிறார்கள். நான் இந்த வரிசையில் தெரிந்தோ தெரியாமலோ சச்சின் டெண்டுல்கருக்கு இடம் தரவில்லை என்பதை நீங்கள் கவனித்தீர்களா எனத் தெரியவில்லை. ஏன் சச்சினுடைய ஆட்டத்தில் வசீகரம் இல்லையா என நீங்கள் ஒருவேளை கேட்டால், “ஐயையோ அப்படியெல்லாம் இல்லை. பேட்டிங் மேஸ்ட்ரோவிற்கு நான் என்ன இடம்கொடுப்பது.
சச்சின் ஒரு ஜீனியஸ். அவருடைய சாதனைகளை யாரால் விஞ்சமுடியும். கடவுளிடம் இருந்து காலட்டத்தைக் கற்றுக் கொண்டவர் அல்லவா.” அப்படி இப்படி என்றெல்லாம் ஏதோவொன்றை சொல்லி சமாளித்து விடுவேன். சச்சினை விட்டுவிட்டு அவருடைய வாரிசான (?) விராட் கோலிக்கு நீ இறங்கி வாவென நீங்கள் அவசரப்படுவது எனக்குப் புரிகிறது. ரோஹித் சர்மாவின் silken touch தொடங்கி வில்லியம்சனின் deft touch வரை எத்தனையோ ஷாட்டுகளை வர்ணித்து சிலாகித்திருக்கிறேன். நேற்றுவந்த ஷுப்மன் கில்லைக் கூட விட்டுவைக்க வேண்டாம் என மனம் துடிக்கிறது.
ஆனால் கோலியின் மாயாஜால மணிக்கட்டு ஷாட்டுகளையோ கண்கவர் கவர் டிரைவ்களையோ பார்த்தால் ஒரு வார்த்தை பேசாமல் கண்டும் காணாமல் கடந்துவிடுவேன். ஏன் விராட் கோலியும் சச்சினைப் போல பேட்டிங் மேஸ்ட்ரோ என்பதாலா என நீங்கள் கேட்டால் என்னுடைய பதில் ‘ஆம் ‘. அதேநேரம் ஜீனியஸா என்றுக் கேட்டால் என்னிடம் பதில் கிடைக்காது. இந்த ஜீனியஸ் என்கிற ஒரு வார்த்தையே கொஞ்சம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது என்பது உங்களைப் போலவே எனக்குமே தெரிந்துதான் இருக்கிறது.
**சரி யாரெல்லாம் ஜீனியஸ்?**
இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக் பியர்லி ஒரு ஜீனியஸ். அவர் ஒரு தொழில்முறை psychoanalyst. ஷேன் வார்ன் ஒரு ஜீனியஸ். கொஞ்சம் பக்கத்தில் வா நண்பா என நீங்கள் வலியுறுத்திக் கேட்பதால் ரவிச்சந்திரன் அஸ்வினை சொல்கிறேன். கிரிக்கெட் குறித்து ஆழ அகலமான வாசிப்பு உள்ளவர். இதெல்லாம் இருக்கட்டும் உன்னிடம் யார் கோலி வாசிப்பு இல்லாதவர் என சொன்னது என நீங்கள் ஒரு நியாயமான ஒரு கேள்வியை கேட்டால் நான் வேறு வழியில்லாமல் பேச்சை திசை திருப்புவதைத் தவிர எனக்கு ஒரு வழியுமில்லை. தத்துவம், உளவியல் மற்றும் நவீன இலக்கியத்தில் கோலியும் பரிச்சியம் கொண்டவர்தான் என்பதை உங்களிடம் இருந்து மறைப்பதில் எனக்கு ஒரு ஆனந்தம். அதுசரி நீ ஜீனியஸ் என ஒத்துக்கொள்ளும் சச்சினின் வாசிப்பு பரிச்சயம் என்னவென நீங்கள் கேட்டுவிட கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
சச்சின் என்றதும் The Age பத்திரிகையின் விளையாட்டு எழுத்தாளர் Greg Baum எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. அதில் அவர் சச்சினை The Secular Giant என வர்ணித்திருப்பார். என்னவொரு அற்புதமான பதம். சரி விராட் கோலியைப் பற்றி உனக்கு கட்டுரைதான் எழுத வரவில்லை. இதுமாதிரியான ஏதாவதொரு பதத்தில் அவரரை உட்புகுத்த முடியுமா எனக் கொஞ்சம் முயன்றுப்பார் என்கிறீர்களா? இந்த ஆட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது.
கண்டிப்பாக கௌதம் காம்பீர், வீரேந்திர சேவாக் போல விராட் கோலி ஒரு இந்து தேசியவாதி கிடையாது. அதேசமயம் தாய்நாட்டின் மீது பற்றுக் கொள்ளாத ரசிகர்கள் நாட்டை விட்டு செல்லலாம் என யாரோ ஒருவரின் கோசத்தை அவர் எதிரொலிக்கிறீராரே? ஆனால் கிரிக்கெட் உலகமே கண்ணை மூடிக் கொண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்தபோது அது experts முடிவு செய்கிற சமாச்சாரமென sensible ஆக பதிலளித்ததும் இதே கோலிதான் என்பதையும் மறுக்க முடியாது. கோலி ஒரு secularist என்பதில் உங்களைப் போலவே எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை ; அதேநேரம் விடாப்பிடியான இந்து தேசியவாதியும் கிடையாது.
கண்டிப்பாக ஒரு சட்டகத்தில் அடைக்க வேண்டுமென நீங்கள் வலியுறுத்திக் கேட்பதால் வேறு வழியில்லாமல் சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசியவாதி வகைமையில் அவரை உட்பொருத்துகிறேன்.
கட்டுரை தீட்டுவதற்கு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என சொல்லிக் கொண்டே கோலிக்கு இந்திய தேசியவாதி என்கிற பட்டத்தை கொடுத்தாகிவிட்டது. சரி ஏன் இந்த இந்திய தேசியவாதி தனக்கு நிகரான ஆளுமைகளுடன் இணக்கமாகச் செல்ல மறுக்கிறார் என்கிற உங்களுடைய கேள்விக்குத்தான் நானும் பதில் தேடிக்கொண்டிருக்கிறேன். அனில் கும்ப்ளே உடனான அவருடைய மோதலை நோக்கித்தான் என்னைத் தள்ளுகிறீர்கள் என்பது எனக்குப் புரியாமல் இல்லை நண்பர்களே.
முதலில் அனில் கும்ப்ளே ஒரு ஜீனியஸ். மறுபடியும் ஜீனியஸ் புராணமா என்று அஞ்சவேண்டாம். சிறுது நேரத்தில் தாண்டிச் சென்றுவிடலாம். கும்ப்ளே ஒரு முழுமையான இந்தியத்தன்மை உடைய ஒரு coach என்பதுதான் பிரச்சினையின் ஆதாரம். இந்தியத்தன்மையின் மீது ஓர் இந்திய தேசியவாதிக்கு என்ன பிரச்சினை என நீங்கள் குழம்புவதற்கு ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன். மேலோட்டத்தில் இருவரும் கறாரானவர்கள் என்றாலும் இருவருக்கும் வித்தியாசம் உண்டு. கும்ப்ளே பழமையான நடைமுறைகளை பின்பற்றி இந்திய உள்ளுணர்வின் அடிப்படையில் செயலாற்றுபவர். கோலி அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் நவீன இந்தியாவின் பிரதிநிதியாக தன்னைக் கருதிக் கொள்பவர். விராட் கோலிக்கு கும்ப்ளேவின் யோசனைகளும் கறார்த்தனமும் பழமைவாதமாக கசக்கிறது. எனக்கு ஒன்று தோன்றுகிறது ஆனால் சொன்னால் என்ன நினைப்பீர்களோ என்றுதான் தயக்கமாக இருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன். கோலிக்கு கிரேக் சாப்பல் பிரமாதமாக ஒத்துப்போவார்.
கைபோன போக்கில் அடித்துவிடு என்று நீங்கள் மய்யமாக சிரிப்பது எனக்குத் தெரியாமல் எல்லாம் இல்லை. என்னசெய்வது கட்டுரையை முடிக்க வேண்டுமே. கும்ப்ளே உடனான மோதலுக்கு பின்னணியில் கோலியின் Anti conservatism இருந்ததைப் பார்த்தோம் அல்லவா. அதன் நீட்சியாகத் தான் கேப்டனான புதிதில் ரஹானே, புஜாரா போன்ற ‘ இந்திய ‘ வீரர்களை அவர் நடத்திய விதத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்ட்ரைக் ரேட்டைக் காரணம் காட்டி புஜாராவையும் அதே போன்றதொரு காரணத்தை சுட்டி ரஹானேவையும் ஒருமுறை அணியை விட்டு கோலி நீக்கினார். ஆனால் யாருக்காக இவர்கள் இருவரையும் நீக்கினார் என்பதில்தான் சுவாரஸ்யமே இருக்கிறது : ரோஹித் ஷர்மா. நினைத்தோம் நீ மறுபடியும் இங்கேதான் வருவாய் என்று நீங்கள் நெளிவது எனக்குத் தெரிகிறது. பதற்றம் வேண்டாம்.
இது கோலி பற்றிய கட்டுரை என்று எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது. ரோஹித் கோலி இடையிலான பந்தம் மிகவும் புதிரானது. கிட்டத்தட்ட உங்களையும் என்னையும் போல. பொதுவில் ஒருமுறை கூட கோலியின் geniusness -ஐ ரோஹித் ஏன் ஒருமுறை கூட புகழவே இல்லை என ஒருமுறையாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஒருவேளை இதனால்தான் ரோஹித்தை எனக்குப் பிடிக்கிறதோ என்னவோ! பிற ‘ இந்திய ‘ வீரர்களைப் போல ரோஹித்தை கோலி அலைக்கழிப்பதில்லை என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. கற்பனைகளை கொஞ்சம் கட்டிவையுங்கள். காரணம் மிக எளிமையானது. தன்னிடம் இல்லாத ஏதோவொரு ஆற்றலை அவர் ரோஹித்திடம் உணர்ந்து அதில் மதிமயங்கிப் போயுள்ளார். கோலியின் Alter ego ரோஹித்தைப் போல எளிமையாக விசயங்களை அணுக ஆசைப்படுகிறது. ‘எதிரியை அரவணைப்பதன் மூலம் அவனை கட்டுக்குள் வைக்கும் உத்தியாக ஏன் இது இருக்கக் கூடாது’ என நீங்கள் கேட்பதுதான் எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.
ஆமாம் இப்போது கோலிக்கு யார் ஆதரவாகப் பேசிக் கொண்டிருப்பது நானா? நீங்களா? ஆரம்பத்தில் இருந்தே நமக்கிடையே இந்தக் குழப்பம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சரி அதை விடுங்கள். உங்கள் அவதானம் சரியாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு கோலி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இந்த விசயத்தில் இது ஓர் உத்தியல்ல என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். விட்டால் ஸ்டீவ் ஸ்மித் மீது கோலிக்கு இருக்கும் மதிப்பையும் கூட சந்தேகக் கண்கொண்டு பார்ப்பீர்கள் போலிருக்கிறதே.
கட்டுரை ஆயிரம் வார்த்தைகளைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது போல. சரி சரி சீக்கிரம் முடித்துவிடுவோம். பிடிக்காத ஒருவரைப் பற்றி எவ்வளவு நேரம்தான் யோசித்துக் கொண்டிருப்பது. ‘உங்களுடைய’ இந்திய தேசியவாதி அணியை நட்டாற்றில் விட்டுவிட்டு மனைவியின் குழந்தைப் பேறுக்காக நாடு திரும்பியது சரியாவென கேட்கிறீர்கள். வாஸ்தவமான கேள்விதான். விவியன் ரிசசர்ட்ஸ் போன்ற ஒரு வரலாற்று நிமித்தம் ( cause ) விராட் கோலிக்கு வாய்க்கவில்லை. அதனால்தான் அவருடைய ஆக்ரோஷம் இயற்கையான ஒன்றல்ல என்பது என்னுடைய அசைக்க முடியாத கருத்து. இந்தியாவின் லிட்டில் மாஸ்டர்களையே உதாரணங்களாக எடுத்துக் கொள்வோம். கவாஸ்கரின் உஷ்ணத்திற்கு் சுதந்திர இந்தியாவின் கௌரவத்தை உலகத்தின் முன் பறைசாற்ற வேண்டுமென்கிற வேட்கை இருந்தது. புனிதப் பசுவான சச்சினுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்து கிரிக்கெட் ஆடுவது மட்டும்தான் ஒரே இலக்கு. விராட் கோலி புனிதப் பசுவும் அல்ல; அவருடைய இந்தியா அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பழைய இந்தியாவும் அல்ல. இல்லாத ஒன்றை மனதில் பற்றவைத்து அவர் தனக்கான நெருப்பை உருவாக்கிக் கொள்ளும் சமர்த்தர். நினைத்த மாத்திரத்தில் அவரால் தன்னை switch on, switch off செய்துகொள்ள முடியும். உன் பாழாய்ப் போன தியரிகளை நிறுத்துவென சத்தமெல்லாம் போட்டு விடாதீர்கள்.
நீங்களே விரும்பிக் கேட்டாலும் இனித் தொடர்வதற்கு ஒன்றுமில்லை. இப்போதுதான் செய்தி கிடைத்தது. ரோஹித் இந்திய அணியுடன் இணைந்து விட்டாராம். உங்களைப் போலவே நானும் சிட்னி டெஸ்டின் போது well done Rohith. Fabulous ???? ! Go well india. என்ற கோலியின் டிவிட்டர் பதிவுக்காக காத்திருக்கிறேன்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: dhinesh.writer@gmail.com
�,”