Vதோனி பற்றி பாகிஸ்தான் வீரர்கள்!

Published On:

| By Balaji

பொதுவாகவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான கிரிக்கெட் போட்டி என்றால் கூட துரதிர்ஷ்டமாக ஒரு போர் மாதிரி எண்ணும் மனோபாவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அன்பும், மரியாதையும் கலந்த வார்த்தைகளால் பாராட்டியுள்ளனர்.

ஆகஸ்டு 15 ஆம் தேதி இரவு, தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார் தோனி. இதை ஒட்டி தோனியுடனான நினைவலைகளை பலரும் பகிர்ந்து வரும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சமூகம் மகேந்திர சிங் தோனியை ஒரே குரலில் பாராட்டியுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன் சமாம் உல் ஹக், “இந்திய கிரிக்கெட் டீம் பெற்ற மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. அவர் என் மனதில் எப்போதும் இருக்கிறார். நான் அவருக்கு எதிராக விளையாடுவதை மிகவும் ரசித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் லத்தீப், “இந்திய கிரிக்கெட்டில் தோனி மரபு என்பது வலிமையாக நிறுவப்பட்டுள்ளது. தோனியின் மரபு என்றென்றும் நினைவில் வைக்கப்படும். தோனி மரபில் நிறைய கிரிக்கெட் வீரர்கள் வருவார்கள்” என்று நெகிழ்ந்துள்ளார். மேலும் அவர், “தோனி அருமையான வீரர் மட்டுமல்ல அருமையான கேப்டனும் கூட. விளையாட்டை மிகவும் துல்லியமாக அணுகுவதற்கும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் தனது வீரர்களைப் பயன்படுத்துவதற்கும் அவர் சாமர்த்தியத்தைக் கொண்டிருந்தார், மேலும் அவர் சரியான போட்டியாளராக இருந்தார். கடந்த ஆண்டு உலகக் கோப்பையின் அரையிறுதிக்குப் பிறகு அவருக்கு எதிராக வந்த விமர்சனங்கள் நியாயமற்றவை, ஏனெனில் அவர் கடினமான சூழ்நிலைகளில் தனது சிறந்த முயற்சியை மேற்கொண்டார்.” என்று கூறியுள்ளார் லத்தீப்.

முன்னாள் டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் முடசர் நாசர், “தோனி கிரிக்கெட்டின் மிகச் சிறந்த ஃபினிஷர்களில் ஒருவர். நான் கென்யாவில் பயிற்சியாளராக இருந்தபோது அவரை முதலில் பார்த்தேன். நைரோபியில் ஒரு போட்டித் தொடர் நடைபெற்றது. தோனி சதங்களை அடித்துக்கொண்டே இருந்தார். அப்போது இவர் இந்திய மற்றும் உலக கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எனக்குத் தெரியாது ”என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முகமது யூசுஃப், “ 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனியின் இன்னிங்ஸ் எனக்கு நினைவிருக்கிறது. அவர் பேட்டிங் வரிசையில் தன்னை உயர்த்திக் கொண்டு மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆக சிக்ஸரை அடித்த விதம் இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை ” என்கிறார்.

முன்னாள் டெஸ்ட் தொடக்க வீரரும், இப்போது பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளருமான மொஹ்சின் கான், “தோனியின் மிகப் பெரிய பங்களிப்பு சிறந்த மூத்த வீரர்களை உள்ளடக்கிய கேப்டனாக இருந்தது மட்டுமல்ல… சிறந்த இளம் வீரர்களை உருவாக்கியதும் கூட. ஆட்டத்தின் சூழலை சமநிலைப்படுத்தும் அவரது பாங்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்” என்று பாராட்டுகிறார்.

முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான மொயின் கானிடம் தோனி பற்றி கேட்டபோது, “தனிப்பட்ட முறையில், அவர் மிகவும் உற்சாகமானவர். பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் மூலம் முன்மாதிரியாக அமைவதற்கான அனைத்து தகுதியும் பெற்றவர் ”என்று தெரிவிக்கிறார்.

பாகிஸ்தானின் அதிரடி ஆட்டக்காரரான ஷாகித் அஃப்ரிடி தன்னுடைய ட்விட்டில், “கிரிக்கெட்டின் லெஜண்டுகளில் தோனியும் ஒருவர். மிகச் சிறந்த கேப்டன். அவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சொல்லிவைத்தாற்போல எல்லா பாகிஸ்தான் வீரர்களும் தோனியை பாராட்டித் தள்ளியுள்ளனர்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share