இந்திய சினிமாவின் மொத்த முதலீடு, மொத்த வருவாய் ஆகியவற்றில் பிரதான பாத்திரம் வகித்து வரும் தமிழ் சினிமாவின் தலைமை அமைப்பான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சுயநலம் இல்லாத தலைமை
கிடைக்காத சோகத்திலிருந்து எழுந்துவர முயற்சிக்கிறது.
எம்ஜிஆர் என்கிற அரசியல்வாதியின் விருப்பத்தின்படி தொடங்கப்பட்ட அமைப்பு தயாரிப்பாளர்கள் சங்கம். ஆனால், இந்த சங்கத்தின் தலைவராக இருந்த கேஆர்ஜி தன்னுடைய சங்க உறுப்பினர் நலனுக்காக எம்ஜிஆர், கருணாநிதி என்கிற இரண்டு ஆளுமைகளுடன் மல்லுக் கட்டியவர்.
அவருக்குப் பின் வந்த இப்ராஹிம் ராவுத்தர், கலைப்புலி தாணு, ராமநாராயணன் ஆகியோர் அரசியல் பின்புலத்துடன் இருந்தவர்கள். தமிழகத்தில் ஆட்சி மாறியதன் காரணமாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர் ராமநாராயணன். அந்த அளவுக்கு தமிழக அரசியலுடன் உறவு கொண்டாடிய அமைப்பு தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
அப்படிப்பட்ட அமைப்பின் பொறுப்பிற்கு வருபவர்கள் அரசியல் அடையாளம் இருக்கக் கூடாது; பொது மனிதராக சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்; தேர்தலைத் தவிர்த்து நல்லவர் ஒருவரை தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும்,கரை படியாத சுத்தமானவர்கள் மட்டுமே சங்க பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்று சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் பாரதிராஜா, சந்திரசேகரன் ஆகியோர் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். ஆனால், இது சாத்தியமில்லை என்கிறது தமிழ் சினிமா வட்டாரம். இயக்குநர் பாரதிராஜாவை போட்டியின்றி தலைவராக கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்றது. அது நடைமுறை சாத்தியம் இல்லை என்ற சூழலில் தேர்தலைத் தவிர்த்து நிர்வாகக் குழுவை உருவாக்கும் முயற்சியில் ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மும்முனைப் போட்டி ஏற்படும் சூழல் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உருவாகியுள்ளது.
சங்கத்தின் முன்னாள் தலைவர் டி.ஜி. தியாகராஜன், தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி, சங்கத்தின் முன்னாள் கவுரவ செயலாளராக பணியாற்றிய அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கம்போல சிறு பட தயாரிப்பாளர்களின் பொருளாதார ஆபத்பாந்தவனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ரங்கா ரெட்டி என்பவர் தலைமையில் ஒரு அணியை உருவாக்கும் முயற்சியை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் விஷால் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதுடன்
அவர் தலைமையில் ஒரு அணியை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அவருக்கு இல்லாமல் போனது.
சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சி போன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அணிகள் முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்கள் கடந்த காலங்களில் சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். ஆனால், இவர்களின் நிர்வாகத் திறமையினால் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவும் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு சிறு பட தயாரிப்பாளர்களால் கூறப்படுகிறது. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக வாக்களிக்கும் உரிமையுள்ள உறுப்பினர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்வதற்கு அனைத்து அணிகளும் அவரவர் சக்திக்கேற்ப ஏற்பாடுகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
**-இராமானுஜம்.**�,