சினிமாவுடனான அனைத்து தொடர்புகளையும் ஒதுக்கிவிட்டு நாட்டிலிருந்தே வெளியேறத் தயாராகிவிட்டார் பிருத்வி ராஜ். இது யாருடனோ ஏற்பட்ட பிரச்சினையால் பிருத்வி எடுத்த முடிவல்ல. இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லை பதிவு செய்வதற்காக பிருத்வி எடுத்திருக்கும் தீர்க்கமான முடிவு.
கேரள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் இயக்குநர் பிலெஸ்ஸி இயக்கும் திரைப்படத்தில் பிருத்வி ராஜ் நடிக்கிறார். கதையின் நாயகனான நஜீப் முஹமது கேரக்டரில் பிருத்வியும், நாயகியாக அமலா பால் நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் ஷூட்டிங் அடுத்த 15 நாட்களில் தொடங்குகிறது.
அரபு நாட்டுக்கு பல விதமான கனவுகளுடன் பயணப்படும் நஜீப், சிலரது சூழ்ச்சியால் அடிமையாக ஆடு மேய்க்கும் வேலைக்கு உட்படுத்தப்படுகிறார். அதீத துன்புறுத்தலுக்கு ஆளாகும் நஜீப் எப்படி தனது நம்பிக்கைகளைக் காத்துக்கொண்டு, அந்த ஆட்டுப் பண்ணையிலிருந்து தப்பித்து இந்தியா வருகிறார் என்பது தான் நாவலின் மேலோட்டமான கதை. இந்தக் கதையை படமாக எடுப்பது என்பதைவிட, நஜீபின் கேரக்டரை எப்படி உயிரோட்டத்துடன் திரைக்குக் கொண்டுவருகிறார்கள் என்பதே படத்தை உருவாக்குவதற்கு முன் இருக்கும் முக்கியமான சவால்.
இதுபோன்ற சவால்களை ஏற்று வெற்றிபெற சில நடிகர்களால் மட்டுமே முடியும். உடலும், மனமும் ஒரே கோட்டில் பயணிக்கும் அளவுக்கு கட்டுப்பாட்டுடன் இருக்கும் நடிகராக தன்னை வளர்த்துக்கொள்ளவும், தனது எல்லைகள் என்னவென்பதை சோதித்துப் பார்க்கவும் முடிவு செய்திருக்கிறார் பிருத்வி ராஜ். இதற்காகவே இப்போது நாட்டைவிட்டு வெளியே செல்லத் தயாராகிவிட்டார்.
இதுகுறித்து பிருத்வி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் “பிலெஸ்ஸிக்கு செய்துகொடுத்திருக்கும் சத்தியம் மற்றும் எனக்கு நானே செய்துகொண்டுள்ள சத்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் நான் இந்த நாட்டைவிட்டே செல்கிறேன். என்னுடைய ஆடுஜீவிதம் படம் முடியும்வரை என் தோற்றத்தை எவ்விதத்திலும் வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. இது பிலெஸ்ஸிக்காக. என்னைப் பொறுத்தவரையில் என் மனது மற்றும் உடல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி நான் என்னுடைய எல்லைகளைக் கடந்து உழைத்தால் மட்டுமே நஜீபின் கேரக்டருக்கு நேர்மை செய்யமுடியும். நஜீப் எப்படி கடைசி வரை அவரது நம்பிக்கைகளையும், உயிரையும் விடாமல் தன்னுடைய கனவினை அடைந்தாரோ அதுபோலவே, என்னுடைய நம்பிக்கையைக் கைவிடாமல் நான் நஜீபாகவே மாறவேண்டும். அதற்காக நான் ஆடுஜீவிதம் படம் முடியும்வரை யார் கண்ணிலும் தென்படமாட்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் பிருத்வி.
**-சிவா**�,