பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பக்கம் மும்முரமாக இருந்தாலும் படங்களில் நடிப்பதிலும் கவனமாக இருந்து வருகிறார், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன். அவர் இப்போது நடித்து வரும் புதிய படத்தில் அல்லாமல், பங்கு கொண்ட படவிழா மூலம் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக கலை, இலக்கிய வட்டத்திலிருந்து கமலுக்கு வரவேற்பும் ஆமோதிப்பும் களைகட்டும். இந்தப் படத்தின் மூலம் இலக்கிய உலகில் எனக் கூறமுடியாது, இலக்கியவாதி ஒருவரின் குடும்பத்தினர் அவருடைய புதிய படத்தால் வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.
காரணம், அந்தப் படத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பு : ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.
1970 களில் கதை வாசித்தவர்களுக்கு இந்தத் தலைப்பைக் கேட்டாலே, ஒருவிதப் பரவசம் வரக்கூடும். அந்த அளவுக்கு தன் கதைகளால் ஏராளமான வாசகர்களை ஈர்த்து வைத்திருந்தார் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன். அவர் கதையாக எழுதி அதன் தொடர்ச்சியாக இதழ் ஒன்றில் தொடராக வந்த நாவல் இது. பிறகு, இதே பெயரில் 1977இல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. பழம்பெரும் இயக்குநர் பீம்சிங் அதை இயக்கியிருந்தார். பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது, இந்தப் படம். பல மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பெயரை புதிய படத்துக்குச் சூட்டியிருக்கிறார்கள். ஆர்வமிகுதியாலோ, அலட்சியத்தாலோ இப்படி நிகழ்ந்துவிட்டது. அண்மைக்காலமாக பழைய படங்களின் பெயரில் புதிய படங்கள் எடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதில் பெரும் பிரச்சினை ஒன்றும் இதுவரை வந்ததில்லை, இந்தப் படத்தைத் தவிர.
சில நேரங்களில் சில மனிதர்கள் தலைப்பை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த ஜெயகாந்தனின் குடும்பத்தினர், கடந்த வியாழனன்று சமூக ஊடகத்தில் பகிரங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். ஜெயகாந்தனின் இளைய மகள் தீபலட்சுமி, அவரின் அண்ணன் ஜெயசிம்மன், அக்கா காதம்பரி மூவரும் கூட்டாக வெளியிட்டிருந்த அந்த வேண்டுகோளில், ஜெயகாந்தனுக்கே அடையாளமான சி.நே.சி.ம. எனும் தலைப்பைக் கைவிடவேண்டும் என்பது மையமாக இருந்தது.
மூவரில் காதம்பரியின் கணவர் மாதவராஜும் ஓர் எழுத்தாளர் என்கிற நிலையில், அவர் சார்ந்த இடதுசாரி எழுத்தாளர்கள் பலரும் இந்தக் கருத்தை தங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் வழிமொழிந்திருந்தார்கள்.
இதில் கமல்ஹாசனுக்கு அவர்கள் வேண்டுகோள் வைத்ததற்கான காரணம், அவர் அண்மையில் புதிய சி.நே.சி.ம. படத்தின் பாடல் வெளியீட்டில் பங்கு பெற்றிருந்தார் என்பதாக இருக்கக்கூடும். இன்னொரு பழைய நிகழ்வையும், அதாவது ‘உன்னைப்போல் ஒருவன்’ எனும் ஜெயகாந்தனின் கதைத்தலைப்பை அவரின் அனுமதியோடு பயன்படுத்திக்கொண்டார் என்பதை ஜெயகாந்தன் குடும்பத்தினர் கமலுக்கு நினைவூட்டியிருந்தனர்.
இதையடுத்து, கமலின் அலுவலகத்தில் பணியாற்றும் செல்வேந்திரன் என்பவர், ஜெயகாந்தன் குடும்பத்தினரை புதுப் படக் குழுவினர் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார். வெள்ளியன்று மாலை நடைபெற்ற அந்தச் சந்திப்பிலும், படக்குழுவினர், இந்தப் படத்தால் புத்தகத்துக்கு கூடுதல் பெயர்தானே எனக் கேட்டதாகக் குறிப்பிடுகிறார் தீபலட்சுமி.
அப்படி பெயரோ புகழோ பெறவேண்டிய நிலை ஜெயகாந்தனின் படைப்புக்கு இல்லை என அவரின் குடும்பத்தினர் தெளிவாக எடுத்துச்சொல்லிவிட்டனர். செய்தது முறையானது இல்லை என்கிறபோது இந்தக் கேள்வி, ஜெயகாந்தனின் ரசிகர்களை சற்றே கோபமடையச் செய்திருக்கிறது என்பதை சமூக ஊடகங்களில் பார்க்கமுடிகிறது.
அடுத்து என்ன நடக்கும்.பேச்சுவார்த்தை நடத்திவிட்டுப் போயிருக்கும் புதிய சி.நே.சி.ம. படக்குழுவினரின் எதிர்வினையைப் பொறுத்தே ஜெ.கா. குடும்பத்தினர் நடந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.
இத்தனைக்கும் தன் காலத்தில் இப்படியான பெயர் கவர்தலைப் பற்றித் தெரிவிப்பவர்களிடம், ‘இல்லாதவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்’ என்று பதில் சொல்வாராம் ஜெயகாந்தன். அதை இப்போது நினைவூட்டும் தீபலட்சுமி, அதற்காக தங்கள் தந்தையின் தலைப்பை வேறு எந்தப் படைப்புக்கும் பொருத்திப்பார்க்க மனம் வரவில்லை என்கிறார்.
பந்து, இப்போதைக்கு காப்பியடித்ததாகக் குற்றம் சாட்டப்படும் படக்குழுவினரிடம் விடப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டத்தை அவர்களே தீர்மானிக்க முடியும்.
**- கதிர்**
�,”