முதன்முறையாக ஹீரோவாகும் செந்தில்.. இயக்குநர் இவரா!

Published On:

| By Balaji

காமெடி ஜாம்பவனாக தமிழ் சினிமாவைக் கலக்கியவர் நடிகர் செந்தில். கவுண்டமணியுடன் இணைந்து இவர் கொடுத்த காமெடிகள் சிரிப்பு பட்டாசுகள். வயதின் காரணமாகப் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

2018-ல் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நினைவுகூரத்தக்க ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு, சிறப்புத் தோற்றத்தில் அவ்வப்போது திரையில் தோன்றுவார். இப்போது மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், ஹீரோவாக நடிக்க இருக்கிறார் செந்தில்.

விதார்த், ரவீனா ரவி நடிப்பில் வெளியான படம் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. இந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இந்தப் படம் குறைவான பட்ஜெட்டில் உருவாகி, பெரிய வரவேற்பைப் பெற்றது. புதுமையான கதைக்களத்துடன் இப்படத்தை இயக்கியிருப்பார் சுரேஷ். இவர் இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார் செந்தில்.

ஹீரோவாக, லீட் ரோலில் இதுவரை செந்தில் நடித்ததில்லை. இதுவே முதல் முறை. கிராமப்புற காமெடி திரைப்படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக ஜெயிலில் இருந்துவிட்டு, கிராமம் திரும்பும் நாயகன், சந்திக்கும் அனுபவங்களே ஒன்லைன். நடிகர் செந்திலுக்கு லைஃப் டைம் திரைப்படமாக இது இருக்கும் என்கிறார்கள். இப்படத்தை சமீர் பாரத் ராம் என்பவர் தயாரிக்கிறார்.

சமீபத்தில் செந்திலை சந்தித்துக் கதை சொல்ல விரும்பியிருக்கிறார் சுரேஷ் சங்கையா. எந்த வித மறுப்பும் சொல்லாமல், கதையைக் கேட்டிருக்கிறார் செந்தில். கதை கேட்டு முடித்த கையோடு, எதையும் யோசிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அதோடு, ஹீரோவுக்கு ஜோடி என்றெல்லாம் படத்தில் கிடையாது. முழு படமுமே செந்தில் மீது தான் பயணமாக இருக்காம். மற்ற கதாபாத்திரங்களுக்குப் புதுமுகங்களைத் தேடிவருகிறது படக்குழு.

இயக்குநர் சுரேஷ் சங்கையா தற்பொழுது பிரேம்ஜி நடிப்பில் சத்திய சோதனை படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது இவருக்கு இரண்டாவது படம். இப்படம் முடிந்த கையோடு, செந்தில் நடிக்கும் படத்தை துவங்குவார் என்று சொல்லப்படுகிறது. எப்படியும், பிப்ரவரி 1ஆம் தேதி செந்தில் படம் அருப்புக்கோட்டை அருகில் இருக்கும் கிராமத்தில் துவங்கிவிடும் என்கிறார்கள். வெல்கம் செந்தில்ணே !

**-ஆதினி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share